நிலநடுக்கம், சுனாமி தாக்கிய இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது


நிலநடுக்கம், சுனாமி தாக்கிய இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது
x
தினத்தந்தி 3 Oct 2018 10:45 PM GMT (Updated: 3 Oct 2018 8:06 PM GMT)

நிலநடுக்கம், சுனாமி தாக்கிய இந்தோனேசியாவின் அதே சுலாவெசி மாகாணத்தில் எரிமலை வெடித்தது. இதனால் அப்பகுதியில் சாம்பல் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

ஜகார்த்தா,

கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள தீவான சுலாவெசியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளியாக இந்த நில அதிர்வு பதிவானது. இதைத்தொடர்ந்து உருவான சுனாமி அலைகளால் பலு மற்றும் டோங்கலா ஆகிய கடலோர நகரங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின.

இந்த அதிர்ச்சியில் இருந்து சுலாவெசி மாகாண மக்கள் மீள்வதற்குள் நேற்று காலை அதே சுலாவெசி மாகாணத்தில் உள்ள பிரபல எரிமலையான சோபுடான் வெடித்துச் சிதறியது.

அப்போது அதிலிருந்து வெளியான சாம்பல் 20 ஆயிரம் அடி உயரத்துக்கு வானத்தில் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதுமே சாம்பல் மண்டலமாக காட்சி அளித்தது. இந்த எரிமலை வெடிப்பில் அப்பகுதியில் உயிர்ச் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் உடனடியாக தெரியவரவில்லை.

இந்த சாம்பல் மண்டலம் அப்பகுதியைச் சுற்றி 10 முதல் 15 கிலோ மீட்டர் தூரம் வரை பரவலாம் என்பதால் இப்பகுதி மக்கள் அசுத்த காற்றை சுவாசிக்காமல் தவிர்க்க சுவாச கவசம் அணியும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் இந்த எரிமலையில் இருந்து சாம்பல் தொடர்ந்து வெளியேறி வருவதால் அப்பகுதியில் வசிப்போரை மீட்கும் நடவடிக்கைகளை இந்தோனேசிய அரசு தொடங்கி உள்ளது.

சோபுடான் எரிமலை திடீரென வெடித்தது குறித்து, இந்தோனேசிய எரிமலை ஆராய்ச்சியாளர் கஸ்பானி கூறுகையில், ‘‘கடந்த வெள்ளிக்கிழமை சுலாவெசியில் ஏற்பட்ட நிலநடுக்கமே இந்த எரிமலை வெடித்ததற்கு முக்கிய காரணம். கடந்த ஆகஸ்டு மாதம் முதலே இந்த எரிமலை குமுறிக் கொண்டிருந்தாலும், நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகுதான் இந்த எரிமலையின் இயக்கம் தீவிரமடைந்து வெடித்துள்ளது’’ என்றார்.

இந்த நிலையில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலுக்கு உள்ளான கடலோர நகரான பலு முற்றிலும் உருக்குலைந்து போய்விட்டது. மற்றொரு நகரான டோங்கலாவும் பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்த 2 நகரங்களிலும் பலியானோர் எண்ணிக்கை 1,400–ஐ தாண்டியது. அங்கு இதுவரை 1,407 பேர் பலியாகி உள்ளனர்.

நிலநடுக்கம், சுனாமி தாக்கி 5 நாட்களுக்கு மேல் ஆவதால் இனி இடுபாடுகளில் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

பலு நகரின் கடற்கரையோரம் இருந்த ரோ–ரோ ஓட்டல் முற்றிலும் தரைமட்டமாகிவிட்டது. அங்கு இன்னும் இடிபாடுகள் முழுமையாக அகற்றப்படாததால் அதற்குள் சிக்கிய 60 பேரும் உயிர் இழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்தோனேசிய நிலநடுக்கம், சுனாமி குறித்து ஐ.நா.வின் மனிதநேய அமைப்பு கூறுகையில், ‘‘இயற்கையின் இந்த இரட்டை தாக்குதல்களிலும் பாதிக்கப்பட்ட 3 லட்சம் சுலாவெசி மக்களுக்கும் அவசர உதவி தேவைப்படுகிறது. இவர்களில் ஒரு லட்சம் பேர் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஆவர். நிலநடுக்கத்தால் 66 ஆயிரம் வீடுகள் முற்றிலும் தரைமட்டமாகிவிட்டன’’ என்று தெரிவித்து உள்ளது.

Next Story