வங்கதேசத்தில் 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு: முன்னாள் மந்திரிகள் உள்பட 19 பேருக்கு தூக்கு தண்டனை


வங்கதேசத்தில் 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு: முன்னாள் மந்திரிகள் உள்பட 19 பேருக்கு தூக்கு தண்டனை
x
தினத்தந்தி 10 Oct 2018 11:30 PM GMT (Updated: 10 Oct 2018 7:25 PM GMT)

வங்கதேசத்தில் 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் மந்திரிகள் உள்பட 19 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

டாக்கா,

வங்கதேசத்தில் அரசியல் கட்சி கூட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில், முன்னாள் மந்திரிகள் உள்பட 19 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசினா. இவர் 2004-ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

அதே ஆண்டு ஆகஸ்டு 21-ந் தேதி டாக்காவில் உள்ள வங்கபந்து அவினியூவில் நடந்த தனது அவாமி லீக் கட்சி பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். 20 ஆயிரம் பேர் கலந்துகொண்டிருந்த அந்தப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசி முடித்ததும், அருகில் உள்ள கட்டிடங்களின் உச்சியில் இருந்து பொதுக்கூட்ட மேடையை நோக்கி கையெறி குண்டுகள் வீசப்பட்டன.

ஷேக் ஹசினாவை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அவர் காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனாலும் அவரது கட்சியின் முன்னணி தலைவர்கள் 24 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல், வங்கதேசத்தையே உலுக்கி விட்டது.

இது தொடர்பான வழக்கில் அப்போதைய பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரகுமான் உள்ளிட்டவர்கள் சிக்கினர். இந்த வழக்கின் விசாரணை டாக்காவில் உள்ள முதலாவது விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்ப்புக்காக டாக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் உள்துறை ராஜாங்க மந்திரி லுட்போசாமன் பாபர், முன்னாள் கல்வித்துறை துணை மந்திரி அப்துஸ் சலாம் பிந்து உள்பட 19 பேருக்கு தூக்கு தண்டனை (மரண தண்டனை) விதித்து நீதிபதி சாகித் நூருதீன் தீர்ப்பு அளித்தார்.

கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரகுமான் உள்ளிட்ட 19 பேருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. 14 ஆண்டுகால விசாரணைக்கு பின்னர் இப்போது இந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கின் தீர்ப்புக்காக லுட்போசாமன் பாபர், அப்துஸ் சலாம் பிந்து உள்ளிட்டவர்கள் காசிம்பூர் உயர் பாதுகாப்பு சிறையில் இருந்து வேனில் பலத்த பாதுகாப்புடன் டாக்கா கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து ஷேக் ஹசினா அரசில் சட்ட மந்திரியாக உள்ள அனிசுல் ஹக் கருத்து தெரிவிக்கையில், “இந்த வழக்கில் வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரகுமானுக்கும், கலீதா ஜியாவின் முன்னாள் அரசியல் செயலாளர் ஹாரிசுக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோருவோம். இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டது தாரிக் ரகுமான்தான். அவர் மரண தண்டனை பெற தகுதி வாய்ந்தவர் ஆவார்” என்று கூறினார்.


Next Story