மலேசிய இடைத்தேர்தலில் அன்வர் இப்ராகிம் வெற்றி


மலேசிய இடைத்தேர்தலில் அன்வர் இப்ராகிம் வெற்றி
x
தினத்தந்தி 14 Oct 2018 11:15 PM GMT (Updated: 14 Oct 2018 7:05 PM GMT)

மலேசிய இடைத்தேர்தலில் அன்வர் இப்ராகிம் வெற்றிபெற்றார். அதனால் அவர் மீண்டும் தீவிர அரசியலில் குதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோலாலம்பூர்,

மலேசிய நாட்டில் எதிர்க்கட்சிகளின் இயக்கத்தை தலைமை தாங்கி வழிநடத்தி வந்தவர் அன்வர் இப்ராகிம். முந்தைய நஜிப் ரசாக் அரசால் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் அங்கு கடந்த மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சற்றும் எதிர்பாராத வகையில் நஜிப் ரசாக் தலைமையிலான ‘பேரிசன் நேஷனல்’ கூட்டணி தோல்வியை தழுவியது.

93 வயதான மகாதீர் முகமது தலைமையிலான 4 கட்சிகளை கொண்ட எதிர்க்கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து மகாதீர் முகமது பிரதமராக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து அவர் அன்வர் இப்ராகிமுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.இந்த நிலையில் அங்கு போர்ட் டிக்சன் தொகுதியில் நேற்று முன்தினம் நடந்த இடைத்தேர்தலில் அன்வர் இப்ராகிம் போட்டியிட்டு, 71 சதவீத ஓட்டுகளுடன் அபார வெற்றி பெற்றார்.

இதையடுத்து அவர் மீண்டும் தீவிர அரசியலில் குதிக்கிறார். தனது வெற்றி குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “ இந்த வெற்றி, எனக்கு ஒரு முக்கிய மைல் கல். அரசு மீதான நம்பிக்கைக்கும், சீர்திருத்தங்களுக்கும், தனிப்பட்ட முறையில் பிரதமருக்கும் கிடைத்த வெற்றி” என கூறினார்.

பிரதமர் மகாதீர் முகமது, 2 ஆண்டுகள் மட்டுமே பிரதமர் பதவி வகிப்பேன் என்று ஏற்கனவே அறிவித்துள்ளார். அவர் அதன்பின்னர் பிரதமர் பதவியை அன்வர் இப்ராகிமிடம் வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.



Next Story