இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமான மீட்பு பணியில் ஈடுபட்ட நீர்முழ்கி வீரர் பலி


இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான  விமான மீட்பு பணியில் ஈடுபட்ட நீர்முழ்கி வீரர் பலி
x
தினத்தந்தி 3 Nov 2018 7:31 AM GMT (Updated: 3 Nov 2018 7:31 AM GMT)

இந்தோனேசியாவில் கடந்த திங்கள் கிழமை விமானம் விபத்துக்குள்ளானது. இதன் மீட்பு பணியில் ஈடுபட்ட நீர்முழ்கி வீரர் பலியானார்.

ஜகார்தா,

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு திங்கள் கிழமை  காலை 6.20 மணிக்கு ‘லயன் ஏர் பேசஞ்சர்ஸ்’ விமானம் புறப்பட்டு சென்றது. 13-வது நிமிடத்தில் அந்த விமானம் திடீரென மாயமாகி கடலில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் 2 கைக் குழந்தைகள் மற்றும் இந்திய விமானி கேப்டன் பவ்வி சுனேஜா உள்ளிட்ட மற்றொரு விமானியும் அடங்குவர்.

விபத்து உறுதி செய்யப்பட்டதும் விமானம் விழுந்த பகுதிக்கு மீட்பு படைகள் விரைந்தன. ஜாவா கடல் பகுதியில் அந்த விமானத்தின் பல்வேறு பாகங்கள் மிதந்த படி இருந்ததை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விமான விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது. 

விமானம் கடலுக்குள் 98 முதல் 115 அடி (30-35 மீட்டர்) ஆழத்தில் மூழ்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே கடலுக்குள் மூழ்கி கிடக்கும் விமான பாகங்கள் மற்றும் பயணிகள் உடல்களை தேடும் பணியில் சிறப்பு பயிற்சி பெற்ற 30 நீர்மூழ்கி வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். ரோபோவும் (எந்திர மனிதன்) கடலுக்குள் இறக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த நீர் மூழ்கி வீரர் சியாக்ருல் ஆண்டோ (வயது 48)  துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார். அழுத்தக்குறைவு காரணமாக ஆண்டோ உயிர் இழந்து இருக்க கூடும் என்று கூறப்படுகிறது. அண்மையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போதும், மீட்பு பணிகளில் ஆண்டோ ஈடுபட்டு இருந்தார். அதேபோல், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏர் ஆசியா விமானம் விபத்துக்கு பிறகு நடைபெற்ற மீட்பு பணியிலும், ஆண்டோ ஈடுபட்டு இருந்ததார். 


Next Story