இலங்கை நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு: ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு


இலங்கை நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு: ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு
x
தினத்தந்தி 3 Nov 2018 11:45 PM GMT (Updated: 3 Nov 2018 7:30 PM GMT)

இலங்கை நாடாளுமன்ற ஓட்டெடுப்பில் ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்து உள்ளது.

கொழும்பு,

இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேயை அண்மையில் அதிரடியாக நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். மேலும் நாடாளுமன்றத்தை வருகிற 16–ந் தேதி வரை முடக்கி வைப்பதாகவும் அறிவித்தார்.

பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு இல்லாத நிலையில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிய கட்சிகளின் எம்.பி.க்களை ராஜபக்சே தன் பக்கம் இழுத்து வருகிறார்.

நேற்று முன்தினம் விளேந்தெரியன் என்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. ராஜபக்சே அணிக்கு தாவினார். அவருக்கு ராஜபக்சே உடனடியாக மந்திரி பதவியும் அளித்தார். இதைத்தொடர்ந்து தமிழர் கட்சியின் மேலும் 4 எம்.பி.க்கள் ராஜபக்சே அணிக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ராஜபக்சேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி முடிவு செய்து உள்ளது.

இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்க 16 எம்.பி.க்களை கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்து இருக்கிறது. இதனால் ராஜபக்சே தோற்கடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் ராஜபக்சே அணிக்கு தாவும் எம்.பி.க்களுக்கு ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி வரை பேரம் பேசப்படுவதாக கூறப்படுகிறது.

இதுபற்றி ரனில் விக்ரமசிங்கே கட்சியின் எம்.பி. பலிதா ரங்கே பண்டாரா கூறும்போது, ‘‘சிறிசேனா ஆதரவாளர் ஒருவர் தரப்பில் இருந்து எனக்கு ரூ.20 கோடியும், மந்திரி பதவி அளிப்பதாகவும் கூறப்பட்டது. இந்த பேச்சை டேப் செய்து வைத்திருக்கிறேன். அதை விரைவில் வெளியிடுவேன்’’ என்றார்.


Next Story