இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நடக்கிறது

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நடக்கிறது
Published on

கொழும்பு,

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதில் கடந்த மாதம் 26-ந் தேதி சிறிசேனா அதிரடியாக ரனில் விக்ரமசிங்கேயை நீக்கி விட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். ஆனால் ரனில் விக்ரமசிங்கே, நான்தான் பிரதமர் என்று அறிவித்தார்.

இருவரில் யார் பிரதமர் என்ற அதிகாரப்போட்டி தொடர்ந்தது. ரனில் விக்ரமசிங்கே பிரதமர் மாளிகையை விட்டு வெளியேற மறுத்து விட்டார். சபாநாயகர் கரு ஜெயசூரியா ரனில் விக்ரமசிங்கேவை பிரதமராக அங்கீகரித்துள்ளார். இருப்பினும் நாடாளுமன்றத்தை கூட்டி, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நாடாளுமன்றத்தை 16-ந் தேதி வரை முடக்கி வைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். பின்னர் நாடாளுமன்றம் 14-ந் தேதி கூடும் என அவர் அறிவித்தார்.

இலங்கையில், நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு எதிராகவும் ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாகவும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இலங்கையில் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன.

இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவி வந்த சூழலில் பிரதமர் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே இலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்தார்.

பின்னர் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக இலங்கை அரசுத் தொலைக்காட்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நடைபெறும் என இலங்கை அதிபர் சிறிசேனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com