ஏமன் போரில் 61 பேர் பலி


ஏமன் போரில் 61 பேர் பலி
x
தினத்தந்தி 11 Nov 2018 6:35 PM GMT (Updated: 11 Nov 2018 6:35 PM GMT)

ஏமனில் நடைபெற்று வரும் போரில் 61 பேர் பலியாகி உள்ளனர்.

ஹொதய்தா,

ஏமனில் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அதிபர் படைகளுக்கு ஆதரவாக சவுதி அரேபிய கூட்டுப்படைகள், கிளர்ச்சியாளர்களை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன.

இந்த நிலையில் 2014-ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள செங்கடல் துறைமுக நகரமான ஹொதய்தாவை மீட்டெடுப்பதற்காக அதிபர் ஆதரவு படைகள் கடந்த சில நாட்களாக கடுமையாக சண்டையிட்டு வருகின்றன.

இந்த சண்டையில் 61 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாகவும், டஜன் கணக்கிலானவர்கள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 43 கிளர்ச்சியாளர்களும், அதிபர் ஆதரவு படையினர் 9 பேரும் போரில் பலியாகி உள்ளதாக அரசு வசமுள்ள மோக்கா நகர ஆஸ்பத்திரி மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறும்போது, “படுகாயம் அடைந்தவர்கள் முதல் கட்ட சிகிச்சைக்கு பின்னர் சனா, இப் மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என கூறினர்.

Next Story