இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும்; சீனா நம்பிக்கை


இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும்; சீனா நம்பிக்கை
x
தினத்தந்தி 14 Nov 2018 11:54 AM GMT (Updated: 14 Nov 2018 11:54 AM GMT)

நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறிய நிலையில் அங்கு அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்,

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரம சிங்கேவுக்கும் இடையேயான பனிப்போரில் கடந்த மாதம் 26-ந் தேதி அதிரடி திருப்பம் ஏற்பட்டது. பிரதமர் பதவியில் இருந்து ரனிலை நீக்கியும், முன்னாள் அதிபர் ராஜபக்சேயை பிரதமர் பதவியில் அமர்த்தியும் சிறிசேனா உத்தரவிட்டார். நாடாளுமன்றத்தையும் முடக்கினார்.

இதனிடையே, நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்குகளின் விசாரணையில், நாடாளுமன்ற கலைப்புக்கு தடை விதித்து நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

வழக்குகளின் அடுத்த கட்ட விசாரணை, அடுத்த மாதம், 4, 5, 6 தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவித்தனர். இந்த உத்தரவு சிறிசேனாவுக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை கூடியது.  இதில், ராஜபக்சேவுக்கு எதிராக ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.

கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஆளும் கட்சி உறுப்பினர்களும்  மோதலில் ஈடுபட்டனர். இதனால்  அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.  இந்த நிலையில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றது.

ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லை என ரணில் தரப்பு சபாநாயகர் கரு. ஜெயசூர்யா அறிவித்து உள்ளார்.  மீண்டும் நாடாளுமன்றம்  நாளை காலை 10 மணிக்கு கூடும் என  சபாநாயகர் கரு. ஜெயசூர்யா அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில், இதுபற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பு பெண் நிர்வாகி ஹூவா சன்யிங் கூறும்பொழுது, இலங்கையுடன் பாரம்பரிய முறையில் நட்பு கொண்டுள்ள அண்டை நாடாக சீனா உள்ளது.  அங்கு நடந்து வரும் நிகழ்வுகளை நாங்கள் உன்னிப்புடன் கவனித்து வருகிறோம்.

இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.  இந்த சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான ஞானம் மற்றும் திறனை அங்குள்ள கட்சிகள் கொண்டுள்ளன என்றும் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என கூறியுள்ளார்.

இலங்கையில் மகிந்தா ராஜபக்சே அதிபராக இருந்தபொழுது சீனாவுக்கு ஆதரவுடன் செயல்பட்டவர்.  அவரது பதவி காலத்தில் ஹம்பன்தோட்டா துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகிய திட்டங்களுக்காக சீனா 800 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடு செய்திருந்தது.

இதனை தொடர்ந்து சிறிசேனா அரசு, ஹம்பன்தோட்டா துறைமுகத்தினை கடன் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் 110 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 99 வருட குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கியிருந்தது.  இதனால் இந்திய பெருங்கடலில் சீனா அடியெடுத்து வைக்க தொடங்கியது.  இதற்கு இந்திய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Next Story