சவூதி பட்டத்து இளவரசர் உத்தரவின் பேரிலேயே காசோக்கி கொல்லப்பட்டுள்ளார் : சிஐஏ தகவல்


சவூதி பட்டத்து இளவரசர் உத்தரவின் பேரிலேயே காசோக்கி கொல்லப்பட்டுள்ளார் : சிஐஏ தகவல்
x
தினத்தந்தி 17 Nov 2018 2:37 AM GMT (Updated: 17 Nov 2018 2:37 AM GMT)

சவூதி பட்டத்து இளவரசர் உத்தரவின் பேரிலேயே காசோக்கி கொல்லப்பட்டுள்ளார் என்று சிஐஏ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தவர் பத்திரிகையாளர் ஜமால்.துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், இரு வாரங்களுக்கு முன்னர் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.

இதனைத் தொடர்ந்து  துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் ஜமால் கொல்லப்பட்டதாகவும், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரையும் துருக்கி வெளியிட்டது.

ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது. இதில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டிய துருக்கி, ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் புகார்களை அடுக்கியது.ஜமால் கொல்லபட்டதைத் தொடர்ந்து மறுத்து வந்த சவுதி, துருக்கி வெளியிட்ட தொடர் ஆதாரங்களால் அவர் கொல்லப்பட்டதை சவுதி ஒப்புக்கொண்டது. ஆனால், இந்த கொலைக்கும் சவூதி அரேபிய பட்டத்து இளவரசருக்கும் தொடர்பு இல்லை என்று சவூதி அரேபிய அரசு மறுத்து வந்தது. 

இந்த நிலையில், அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ, பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் உத்தரவையடுத்தே கசோக்கி கொல்லப்பட்டுள்ளார் என்ற முடிவுக்கு வந்துள்ளது. பல்வேறு ஆதாரங்கள் அடிப்படையில், முகமம்து பின் சல்மான் தான் கசோக்கியை கொலை செய்ய உத்தரவிட்டதாக, சிஐஏ அதிகாரி கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவுக்கான சவூதி தூதர் காலித், பத்திரிகையாளர் கசோக்கியை, தனது ஆவணங்கள் சிலவற்றை எடுப்பதற்காக இஸ்தான்புல்லில் உள்ள தூதரகம் செல்லுமாறு கேட்டுக்கொண்டதாகவும், சவூதி பட்டத்து இளவரசர் வலியுறுத்தலின் பேரிலேயே காலித் இவ்வாறு நடந்து கொண்டார் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story