பத்திரிகையாளர் கசோக்கி படுகொலையில் ‘உறுதியான எந்த முடிவுக்கும் வந்துவிடவில்லை’ அமெரிக்கா அறிவிப்பு


பத்திரிகையாளர் கசோக்கி படுகொலையில் ‘உறுதியான எந்த முடிவுக்கும் வந்துவிடவில்லை’ அமெரிக்கா அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2018 11:15 PM GMT (Updated: 18 Nov 2018 7:12 PM GMT)

துருக்கியில் உள்ள இஸ்தான்புல் சவுதி துணை தூதரகத்தில், சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கடந்த மாதம் 2–ந் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் இருந்து வெளிவருகிற ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் கொலை செய்யப்பட்ட கசோக்கி,  கட்டுரைகள் எழுதி வந்தவர். இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு விசாரணை நடத்தி வருகிறது.

கசோக்கி படுகொலை, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டுத்தான் நடந்துள்ளது என அமெரிக்க உளவு நிறுவனம் சி.ஐ.ஏ. கூறியதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளேடு கூறியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், கசோக்கி படுகொலையில் அமெரிக்கா எந்த இறுதி முடிவுக்கும் வந்து விடவில்லை என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுபற்றி வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட் கூறுகையில், ‘‘ கசோக்கி படுகொலையில் தொடர்பு உடையவர்கள் அனைவரும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இதில் அமெரிக்கா இறுதி முடிவுக்கு வந்து விட்டதாக வெளியான தகவல்கள் சரியானவை அல்ல. இந்த படுகொலையில் பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. தொடர்புடைய அனைத்து உண்மைகளையும் வெளியுறவுத்துறை தொடர்ந்து தேடும். இதற்கு மத்தியில் நாம் நாடாளுமன்றத்தையும் கலந்து ஆலோசிப்போம். பிற நாடுகளையும் கலந்து பேசுவோம்’’ என குறிப்பிட்டார்.

இதற்கிடையே கலிபோர்னியாவில் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, கசோக்கி படுகொலை, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டுத்தான் நடந்திருப்பதாக சி.ஐ.ஏ. கூறி இருப்பதாக வெளியான செய்தி பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘இன்னும் அவர்கள் முடிவுக்கு வரவில்லை. திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை (இன்று அல்லது நாளை) முழுமையான அறிக்கை வரும். அப்போதுதான் கொலைக்கு காரணம் யார், செய்தது யார் என்பதெல்லாம் தெரிய வரும்’’ என கூறினார்.


Next Story