அமெரிக்காவில் 16 வயது சிறுவனால் இந்தியர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்தியர் சுனில் எட்லா, 16 வயது சிறுவன் ஒருவனால் சுட்டுக்கொல்லைப்பட்டார். இதற்கான பின்னணி என்ன? என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவில் 16 வயது சிறுவனால் இந்தியர் சுட்டுக்கொலை
Published on

நியூயார்க்,

அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் அட்லாண்டிக் நகரம் அருகே வென்ட்னார் நகரத்தில் நாஷ்வில்லே அவினியூவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர், சுனில் எட்லா (வயது 61). இந்தியர். இவர் அங்கு ஆடிட்டராக பணியாற்றி வந்தார்.

கடந்த வியாழக்கிழமை இரவு, அவர் தனது அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து இரவுப்பணிக்கு செல்ல கீழே இறங்கி வந்தபோது அங்கு மறைந்திருந்த மர்ம நபர் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு ரத்த வெள்ளத்தில் வீழ்த்தி விட்டு தப்பினார்.

அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து, அவர்கள் வருவதற்குள் சுனில் எட்லா உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுனில் எட்லாவின் கார், வீட்டில் இருந்து மாயமாகி விட்டது. எனவே காரை கொள்ளையடிப்பதற்காகத்தான், சுனில் எட்லா படுகொலை செய்யப்பட்டுள்ளார் என கருதப்படுகிறது.

சுனில் எட்லாவின் கார் வேறு ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அட்லாண்டிக் நகர கண்காணிப்பு மையத்தின் உதவியுடன், அந்த காரை ஓட்டிச்சென்றவர் யார் என கண்டறிந்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் 16 வயது சிறுவன். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி விட்டு, எக் ஹார்பர் நகரில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த சிறையில் அடைத்தனர்.

சுனில் எட்லாவுக்கு 2 பிள்ளைகள். பேரக்குழந்தையும் உள்ளது.

சுனில் எட்லா சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி அவரது மகன் மோரிசன் எட்லா கூறும்போது, நான் பேச்சு மூச்சற்றுப்போய் விட்டேன். காரை கொள்ளையடித்தவர்கள், என் தந்தையை விட்டிருக்கலாமே என வேதனையுடன் குறிப்பிட்டார்.

சுனில் எட்லாவின் நெருங்கிய உறவினரான ராஜ் காசுலா கூறுகையில், அவர் (சுனில் எட்லா) மிகவும் மென்மையானவர். யாரிடமும் எதற்கும் வாக்குவாதம் செய்ய மாட்டார். நான் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தேன். அவர் 1987ம் ஆண்டு இங்கு வந்து குடியேறியபோது அவருக்கு தேவையான உதவிகள் செய்தேன். இப்போது அவர் இந்தியாவுக்கு 2 மாதம் செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். தனது தாயாரின் 95வது பிறந்த நாளை கொண்டாட வேண்டும், குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று விரும்பினார் என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, அவர் இந்தியாவுக்கு சென்று வர திட்டமிட்டிருந்ததால் எல்லோரும் அவரை அழைத்து பேசிக் கொண்டிருந்தார்கள் என்றார்.

சுனில் எட்லாவின் குடும்ப நண்பர் தவே நேத்தகனி கூறுகையில், சுனில் எட்லா மிகவும் அருமையான மனிதர். அட்லாண்டிக் நகரில் தேவாலய வழிபாட்டில் பியானோ வாசிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார் என்றார்.

கொலை செய்யப்பட்டுள்ள சுனில் எட்லா, தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தை சேர்ந்தவர் என தகவல்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com