அமெரிக்க ஆஸ்பத்திரியில் துப்பாக்கிச்சூடு - பெண் டாக்டர் உள்பட 4 பேர் பலி


அமெரிக்க ஆஸ்பத்திரியில் துப்பாக்கிச்சூடு - பெண் டாக்டர் உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 20 Nov 2018 11:30 PM GMT (Updated: 20 Nov 2018 7:34 PM GMT)

அமெரிக்க ஆஸ்பத்திரியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் டாக்டர் உள்பட 4 பேர் பலியாகினர்.

சிகாகோ,

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி வன்முறைக் கலாசாரம் வளர்ந்து வருகிறது. அங்கு துப்பாக்கிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 13 ஆயிரம் பேர், துப்பாக்கிச்சூடுகளில் பலியாகி உள்ளனர். 25 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பணியில் இருந்தபோது 250 போலீஸ் அதிகாரிகளும் சுடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அங்கு இல்லினாய்ஸ் மாகாணம், சிகாகோ நகரில் உள்ள மெர்சி ஆஸ்பத்திரியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், அந்த நகரையே உலுக்கி உள்ளது.

அந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த பெண் டாக்டர் டாமரா ஓ நீல் என்பவருக்கும், மற்றொரு ஆணுக்கும் இடையே உள்ளூர் நேரப்படி பகல் சுமார் 3 மணிக்கு வாகனம் நிறுத்துமிடத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கு டாக்டர் டாமராவின் நண்பர் வந்து அவர்களிடையே சமரசம் செய்து வைக்க முயற்சித்துள்ளார். ஆனால் அந்த ஆண், உடனடியாக தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து டாக்டர் டாமராவை கண் இமைக்கும் நேரத்தில் சுட்டு வீழ்த்தினார். ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்தார்.

உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து சேர்ந்த நேரத்தில், துப்பாக்கி ஏந்திய அந்த நபர், ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தார். அங்கு அவர் கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார். இதில் அந்த ஆஸ்பத்திரியில் மருந்தாளுனராக பணியாற்றி வந்த டெய்னா லெஸ் என்ற பெண் குண்டு பாய்ந்து பலியானார்.

அதைத் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய நபருக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த சண்டையின்போது சாமுவேல் ஜிம்னெஸ் என்ற போலீஸ் அதிகாரி பலியானார்.

மற்றொரு போலீஸ் அதிகாரி மீதும் அந்த நபர் சுட்டார். ஆனால் அந்த போலீஸ் அதிகாரி தப்பித்து விட்டார்.

இந்த சம்பவத்தின் முடிவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் பலியானார். அவர் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு இரையானாரா அல்லது தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தாரா என்பது உறுதிபட தெரியவில்லை. இருப்பினும் ஒரே நேரத்தில் 4 பேர் அங்கு துப்பாக்கிச்சூட்டில் பலியானது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவருக்கும் அவரது துப்பாக்கிச்சூட்டில் முதல் பலியான பெண் டாக்டர் டாமராவுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததாகவும், டாமராவை அவர் திருமணம் செய்து கொள்ள நிச்சயித்திருந்ததாகவும் முரண்பட்ட தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும் இந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணி என்ன என்பது உறுதி படத்தெரியவில்லை.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்து சிகாகோ நகர மேயர் ரேஹம் இமானுவேல் விடுத்துள்ள அறிக்கையில், “இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் நகரத்தின் ஆன்மாவே கண்ணீர் சிந்துகிறது” என உருக்கமுடன் கூறி உள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியான மருந்தாளுனர் டெய்னா லெஸ் (வயது 25), கடந்த ஜூலை மாதம்தான் பணியில் சேர்ந்துள்ளார், பலியான போலீஸ் அதிகாரி சாமுவேல் ஜிம்னெசுக்கு (28) திருமணமாகி குழந்தை உள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.





Next Story