ஓரின சேர்க்கை காதலனுடன் சேர்ந்து வாழ மனைவியை கொலை செய்த கணவன்


ஓரின சேர்க்கை காதலனுடன் சேர்ந்து வாழ மனைவியை கொலை செய்த கணவன்
x
தினத்தந்தி 6 Dec 2018 6:03 AM GMT (Updated: 6 Dec 2018 6:03 AM GMT)

ஓரின சேர்க்கை காதலனுடன் சேர்ந்து வாழ, மனைவியை கணவரே கொலை செய்து உள்ளார். ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

லண்டன்,

இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள மிட்டில்ஸ்பரோ பகுதியில் வசித்தவர் ஜெசிகா படேல் (34). இவரது கணவர் மிதேஷ் படேல் (37). இருவரும் சேர்ந்து அதே பகுதியில் மருந்துக் கடை நடத்தி வந்தனர்.

கடந்த மே மாதம் 14-ம் தேதி ஜெசிகா படேல் வீட்டில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கணவர் மிதேஷ் படேலிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கொலையை தான் செய்யவில்லை என்று அவர் திட்டவட்டமாக மறுத்தார். தான் வீட்டுக்கு வந்த போது, மனைவியின் கைகள் டேப்பால் கட்டப்பட்டிருந்தது. அவரை கொலை செய்து கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது என்று தெரிவித்தார். ஆனால் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ஓரின சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் ‘ஆப்’பை மிதேஷ் பதிவிறக்கம் செய்துள்ளார். அதன் மூலம் டாக்டர் அமித் படேல் என்பவர் பழக்கமாகி உள்ளார். இருவரும் ஓரின சேர்க்கையாளர்களாக பழகி உள்ளனர். அதன் பின், மனைவியைக் கொன்று விட்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று மிதேஷ் திட்டமிட்டுள்ளார்.

அதற்காக இணையதளங்களில் பல விஷயங்களை மிதேஷ் தொடர்ந்து தேடி வந்துள்ளார். குறிப்பாக என் மனைவியை கொலை செய்ய வேண்டும், அதிக இன்சுலின், என் மனைவியை கொல்லும் வழி, என்னுடன் வேறு யாரையாவது சேர்த்து கொள்ள வேண்டுமா? பிரிட்டனில் கூலிப் படையை ஏற்பாடு செய்யலாமா என பல கேள்விகளுக்கு இணையதளத்தில் பதில் தேடியிருக்கிறார்.

ஜெசிகா படேல் பெயரில் 20 லட்சம் பவுண்ட் இன்சூரன்ஸ் பாலிசி உள்ளது. அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு, தனது ஓரின சேர்க்கை  நண்பர் அமித் படேலுடன் ஆஸ்திரேலியாவில் குடியேற மிதேஷ் திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் கடந்த 2015-ம் ஆண்டு, ‘அவளுடைய நாட்கள் குறிக்கப்பட்டு விட்டன’ என்று அமித் படேலிடம் மிதேஷ் கூறியிருக்கிறார்.

இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் தொடங்கியது. அப்போது, மிதேஷ் படேலுக்கு எதிராக சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் போலீஸார் தாக்கல் செய்தனர். அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்து பார்த்த டெஸ்ஸைட் கிரவுன் நீதிமன்ற நீதிபதி ஜேம்ஸ் கோஸ், இந்த வழக்கில் கணவர் மிதேஷ் குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் இருப்பதாகக் கருதி வழக்கை ஜூரியிடம் ஒப்படைத்தார். அப்போது நீதிபதி ஜேம்ஸ் கூறும்போது, ‘‘இந்த வழக்கில் மனைவிக்கு கணவர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. மனைவியை திட்டமிட்டு ஏமாற்றி இருக்கிறார். அவர் குற்றவாளி என்பது நிரூபணமானால் அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்க சட்டத்தில் இடமுள்ளது’’ என்று பரிந்துரைத்தார்.

அதன்பின், இந்த வழக்கை 3 பெண்கள், 3 ஆண்கள் அடங்கிய ஜூரி குழு தொடர்ந்து விசாரித்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது, 3 மணி நேரம் தீவிர ஆலோசனை செய்த ஜூரி குழுவினர், மிதேஷ் குற்றவாளி என்று அறிவித்தனர். இவருக்கான தண்டனை விவரம் விரைவில் வெளியிடப்படும்.

Next Story