இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே ராஜினாமா


இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே ராஜினாமா
x
தினத்தந்தி 15 Dec 2018 11:09 AM IST (Updated: 15 Dec 2018 11:09 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.

கொழும்பு,

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இது அரசியல் நெருக்கடிக்கு வழி வகுத்ததால் நாடாளுமன்றத்தை கலைத்து அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந் தேதி தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் இதை சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்தது. மேலும் ராஜபக்சே மற்றும் அவரது மந்திரிசபை செயல்பட அப்பீல் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து ராஜபக்சே தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றம் கலைப்பு நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சிறிசேனாவின் இந்த நடவடிக்கை சட்ட  விரோதமானது என நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து அதிபர் சிறிசேனா தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய சிறிசேனா, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

 இந்த சூழலில், இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக முடிவு செய்து இருப்பதாக அவரது மகன் நமல் ராஜபக்சே நேற்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்,  இலங்கை பிரதமர் பதவியில் இருந்து  மகிந்த ராஜபக்சே விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு ராஜபக்சே அனுப்பி வைத்துள்ளார்.
1 More update

Next Story