நெதர்லாந்து நாட்டில் அமெரிக்க மாணவி குத்திக்கொலை


நெதர்லாந்து நாட்டில் அமெரிக்க மாணவி குத்திக்கொலை
x
தினத்தந்தி 15 Dec 2018 10:30 PM GMT (Updated: 15 Dec 2018 7:05 PM GMT)

அமெரிக்காவை சேர்ந்தவர் மாணவி, சாரா பாப்பன்ஹெயிம் (வயது 21). இவர் நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டாம் நகரில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி இருந்து, இராஸ்மஸ் பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்து வந்தார்.

ஆம்ஸ்டர்டாம்,

சாரா பாப்பன்ஹெயிம், தனது அறையில் கத்திக்குத்து காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு கடந்த புதன்கிழமையன்று தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்றபோது அவரது உயிர் பிரிந்திருந்தது. இந்தப் படுகொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் சாரா வசித்து வந்த அதே அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த ஆண் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் இன்தோவன் ரெயில் நிலையத்தில் வைத்து சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த கொலையின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரிய வரவில்லை.

கொலை செய்யப்பட்ட சாரா, டிரம் இசைக் கலைஞரும் ஆவார், அமெரிக்காவில் மின்னசோட்டாவில் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

இவரது சகோதரர் ஜோஷ் 3 ஆண்டுகளுக்கு முன்னர் தனது 21 வயதில் தற்கொலை செய்து கொண்டார். இப்போது சாராவும் கொலை செய்யப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினருக்கு பேரிழப்பாக அமைந்து விட்டது.


Next Story