உலகளவில் அதிகளவு ஸ்பேம் அழைப்புகளால் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 2-வது இடம்


உலகளவில் அதிகளவு ஸ்பேம் அழைப்புகளால் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 2-வது இடம்
x
தினத்தந்தி 19 Dec 2018 7:11 AM GMT (Updated: 19 Dec 2018 7:11 AM GMT)

உலகளவில் அதிகளவு ஸ்பேம் அழைப்புகளால் பாதிக்கப்படும் 20 நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 2-வது இடம் கிடைத்து உள்ளது.

2018 ஆம் ஆண்டு ஸ்பேம் (தேவையற்ற) அழைப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பிரேசில் முதலிடத்தை பிடித்துள்ளது. பிரபல தகவல் பரிமாற்ற செயலியான ட்ரூகாலர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஸ்பேம் அழைப்புகளால் பாதிக்கப்படும் நாடுகளின் விவரங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்தியர்களுக்கு வரும் மொத்த அழைப்புகளில் கிட்டத்தட்ட ஆறு சதவிகிதத்திற்கும் அதிகமானவை ஸ்பேம் அழைப்புகளாக இருந்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் ஸ்பேம் அழைப்புகளின் எண்ணிக்கை 22.3 கால்கள் என மாதாந்திர அடிப்படையில் பதிவாகி இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 1.5 சதவிகிதம் குறைவு ஆகும்.

பிரேசிலில் வசிக்கும் ட்ரூகாலர் பயனர்கள் மாதம் 37.5 ஸ்பேம் அழைப்புகளை பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 81 சதவிகிதம் அதிகம் என ட்ரூகாலர் இன்சைட் பிரித்யேக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ட்ரூகாலர் வெளியிட்டிருக்கும் ஸ்பேம் அழைப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் பிரேசில், இந்தியாவை தொடர்ந்து சிலி, தென் ஆப்ரிக்கா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன. இந்தியாவில் அதிக ஸ்பேம் அழைப்புகளுக்கு காரணமானவர்கள் பட்டியலில் டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் முதலிடம் பிடித்துள்ளன.

இந்த ஆண்டு பயனர்கள் எதிர்கொண்ட ஸ்பேம் அழைப்புகளில் 91 சதவிகிதம் டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் இருந்துள்ளன. இவற்றில் பேலன்ஸ் இருப்புத் தொகையை நினைவூட்டுவது, புதிய சலுகைகளை அறிவிப்பது போன்றவற்றுக்காக டெலிகாம் நிறுவனங்கள் சார்பில் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டெலிகாம் நிறுவனங்களை தொடர்ந்து டெலிமார்கெட்டிங் செய்வோர் 2  சதவிகிதம் பயனர்களுக்கு இடையூறாக இருக்கும் படி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர். மீதி  7 சதவீதம் முறைகேடான  அழைப்புகள் ஆகும்.  சர்வதேச அளவில் 1.77 கோடி ஸ்பேம் அழைப்புகள் கண்டறியப்பட்டதாக ட்ரூகாலர் தெரிவித்துள்ளது. பயனர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நான்காவது அழைப்பும் ஸ்பேம் ஆகும்.

Next Story