சிரியாவில் ஐ.எஸ். அமைப்பை அழிப்பதே அமெரிக்காவின் பணி : உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவது அல்ல - வெள்ளை மாளிகை


சிரியாவில் ஐ.எஸ். அமைப்பை அழிப்பதே அமெரிக்காவின் பணி :  உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவது அல்ல - வெள்ளை மாளிகை
x
தினத்தந்தி 20 Dec 2018 5:16 AM GMT (Updated: 20 Dec 2018 5:16 AM GMT)

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பை அழிப்பதே அமெரிக்காவின் பணி, உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவது இல்லை என அமெரிக்க வெள்ளை மாளிகை கூறி உள்ளது.

வாஷிங்டன்,

கடந்த 2015-ஆம் ஆண்டில் முதல்முறையாக அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் உத்தரவின் பேரில் சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரோடு போரிட்டு வந்த உள்ளூர் குர்தீஷ் போராட்டக்காரர்களுக்கு உதவிட அமெரிக்க படைகள் அங்கு சென்றன.

இதற்கு முன்னர் பலமுறை ஐ.எஸ். எதிர்ப்பு அமைப்பினருக்கு ஆயுதம் வழங்கிடும் மற்றும் பலமாக்கிடும் முயற்சிகள் குழப்பத்தில் முடிந்ததால் மிகுந்த தயக்கத்துடனே இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்தது.

தற்போது வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப்படையினர் உதவி செய்தனர். ஆனால் இன்னமும் சில பகுதிகளில் சண்டை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஐ.எஸ். குழுவினர் மீண்டும் தலையெடுத்து விடாமல் தடுப்பதற்காக அங்கே மேலும் சிலகாலம் தங்கியிருக்க வேண்டும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத்துறை கருதுகிறது.

வடக்கு சிரியாவில் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் குர்து போராளிகள் மீது தாக்குதல் தொடுக்க தயாராகி வருவதாக துருக்கி தெரிவித்திருந்த நிலையில் தற்போது அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுவது குறித்த தகவல்கள் வெளியாகின்றன. துருக்கி அத்தகைய தாக்குதலைத் தொடுக்குமானால், அது அமெரிக்காவும் துருக்கியும் மோதும் நிலைக்கு கொண்டு செல்லும்.

ஐ.எஸ். தீவிரவாதக் குழு முற்றிலும் அழிந்து விடவில்லை. சிரியாவில் இன்னமும் 14,000 ஐ.எஸ். போராளிகள் இருப்பதாகவும், இதைவிட அதிக எண்ணிக்கையில் அருகில் உள்ள ஈராக்கில் அவர்கள் இருப்பதாகவும் சமீபத்திய அமெரிக்க அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இத்தீவிரவாதக் குழுவினர் கொரில்லா போர்முறைக்கு மாறி தங்கள் அமைப்பை மீண்டும் கட்டமைக்க முயல்வார்கள் என்ற அச்சமும் நிலவுகிறது.

இந்த நிலையில்  டிரம்ப் நிர்வாக வெள்ளை மாளிகை  அதிகாரி ஒருவர் கூறும் போது,  கடந்த இரு ஆண்டுகளில் உள்நாட்டுப் போரை தீர்க்க சிரியாவிற்குள் அமெரிக்கா செல்லவில்லை என்று தெளிவாக அறிவித்துள்ளது.  "நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பது ஐ.எஸ். அமைப்பை  அழிக்க வேண்டும்" என்பது தான் என கூறினார்.

Next Story