வெளிநாடுகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர் எம்.ஜி.ஆர். - லண்டனில் நடந்த விழாவில், சைதை துரைசாமி புகழாரம்


வெளிநாடுகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர் எம்.ஜி.ஆர். - லண்டனில் நடந்த விழாவில், சைதை துரைசாமி புகழாரம்
x
தினத்தந்தி 9 Jan 2019 11:15 PM GMT (Updated: 9 Jan 2019 9:20 PM GMT)

வெளிநாடுகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர் எம்.ஜி.ஆர். என்று லண்டனில் நடந்த விழாவில், சைதை துரைசாமி புகழாரம் செலுத்தினார்.

லண்டன்,

லண்டன் எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அங்குள்ள ரெட்பிரிட்ஜ் டவுன் ஹாலில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய மையத்தின் தலைவருமான சைதை துரைசாமி தலைமை தாங்கினார்.

தமிழ் திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான், ஈஸ்ட் ஹாம் எம்.பி. டிம்ஷ் ஸ்டீபன்ஸ், கவுன்சிலர்கள் மேரி குரூஸ், பரம் நந்தா, பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் முருகு பத்மநாபன், நாமக்கல் எம்.ஜி.ஆர்., டி.எம்.எஸ். பால்ராஜ், சிங்கப்பூர் மஞ்சுளா, மலேசியா எம்.ஜி.ஆர். பாலன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

விழாவில் 25 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் தங்கர் பச்சான் எழுதிய ‘வெள்ளை மாடு’ சிறுகதைகள் தொகுப்பின் சிறப்பு பதிப்பும், ‘9 ரூபாய் நோட்டு’ நாவலின் 5-வது பதிப்பும், பேராசிரியை ராஜேஸ்வரி செல்லையா எழுதிய, ‘எம்.ஜி.ஆர். ஒரு ஜீவநதி’, ‘கலியுக போராளி எம்.ஜி.ஆர்.’ ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன.

விழாவில் சைதை துரைசாமி பேசியதாவது:-

எம்.ஜி.ஆர்., வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை (தகவல் தொழில்நுட்பம்) ஏற்படுத்தி அவர்களது குடும்ப அந்தஸ்தை உயர வைத்தவர்.

திரைப்படத் துறையில் அவர் ஒரு சிற்பி சிலையை செதுக்குவதைப் போல தன்னுடைய எண்ண வடிவங்களை, மக்கள் நலனை, வாழ்வியல் பண்புகளை அனைத்தையும் செதுக்கி, செதுக்கி கல்வெட்டாக பதித்து உள்ளார்.

அனைவருக்கும், எல்லா காலங்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் தன்னுடைய கலை பயணத்தை தொடர்ந்து ஒரு மாபெரும் நடிகராக திரைப்படத்துறையில் பவனி வந்து வெற்றி கண்டவர்.

எம்.ஜி.ஆர். ஆட்சியில் அமர்ந்தவுடன் ஏழை-எளியவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோரின் வாழ்க்கை தரம் உயரும் வகையில் திட்டங்களை தீட்டி மக்களுக்கான ஆட்சி என்பதை நிலை நிறுத்தினார்.

எதை எடுத்துக் கொண்டாலும், அது மக்களுக்காக என்று தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்ட அதிசய மனிதர் எம்.ஜி.ஆர்., அவரை போன்ற மனிதர்கள் தோன்றுவது அரிது. எம்.ஜி.ஆர். ஒரு இறை தூதர் என்று கூட சொல்லலாம். இவ்வாறு அவர் பேசினார்.

விழா ஏற்பாடுகளை லண்டன் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் அப்பு தாமோதரன் செய்திருந்தார். எஸ்.வி. ரஞ்சன் நன்றி கூறினார்.


Next Story