மிளகாய் வத்தல் காய வைத்து அதன் அருகில் வயதான தாய் ஒருவர் -வைரலான புகைப்படம்


மிளகாய் வத்தல் காய வைத்து அதன் அருகில் வயதான தாய் ஒருவர் -வைரலான புகைப்படம்
x
தினத்தந்தி 14 Jan 2019 8:19 AM GMT (Updated: 14 Jan 2019 8:19 AM GMT)

சிங்கப்பூரில் மிளகாய் வத்தல் காய வைத்து அதன் அருகில் வயதான தாய் ஒருவர் படுத்திருப்பது போன்ற படம் சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

சிங்கப்பூரில் இருக்கும் தன்னுடைய மகனை பார்க்க சென்றுள்ள தாயார் ஒருவர் அங்கே மிளகாய், மல்லி, மஞ்சள் என மசாலா பொருள்களை நடைபாதையில் காயவைத்து அதற்கு பாதுகாவலராக பக்கத்திலேயே படுத்து உறங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இது குறித்த பதிவினை தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளதுடன் தன்னுடைய வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில், இந்தியாவிலிருந்து யாரோ ஒரு நண்பர் சிங்கப்பூருக்கு அம்மாவை அழைத்து வந்திருக்கிறார். இங்குள்ள விதிமுறைகள் சட்டதிட்டங்கள் பற்றி கூறாமல் உள்ளார் போல.

அந்தம்மா மிளகாய், மல்லி, மஞ்சள் என மசாலா பொருள்களை நடைபாதையில் காயவைத்து அதற்கு பாதுகாவலராக பக்கத்திலேயே படுத்து உறங்கியும் உள்ளார். உள்ளூர்வாசிகள் பேஸ்புக்கில் அதை பதிவிட்டுள்ளனர்.

பார்க்க கொஞ்சம் மனது கஷ்டப்பட்டது. பெற்றோரை வரவழைக்கும் போது இது போன்ற செயல்களை தவிர்க்க அறிவுறுத்துங்கள். பணத்தைக்கொடுத்து பொருளை வாங்கித்தின்னும் நெட்டிசன்களுக்கு, வயலில் விளைந்ததை பிள்ளைகளுக்காக பொட்டலம் கட்டி விமானத்தில் கொண்டு வந்து, அதை வெயிலில் உலர்த்தி தேக்காவில் உள்ள மில்லில் அரைத்துக்கொண்டு வந்து பிள்ளைகளுக்கு சமைக்க எண்ணிய தாயன்பை ஏளனம் செய்து பதிவிடும் உயர்தட்டு கணிணி உலக நண்பர்களுக்கு புரியாது. உழவை அறியாத பூமி, அறியாமையை ஏளனம் செய்வது வேதனை என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Next Story