கொசுக்களின் இனப்பெருக்கத்தினை ஒழிக்க விஞ்ஞானிகள் புது முயற்சி


கொசுக்களின் இனப்பெருக்கத்தினை ஒழிக்க விஞ்ஞானிகள் புது முயற்சி
x
தினத்தந்தி 24 Jan 2019 12:41 PM GMT (Updated: 24 Jan 2019 12:41 PM GMT)

கொசுக்களின் இனப்பெருக்கத்தினை ஒழிக்கும் வகையிலான ஆண் கொசுக்களை ஆய்வகத்தில் உற்பத்தி செய்ய விஞ்ஞானிகள் புது முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

பூமியில் பிறந்த மனிதர்கள் வயது முதிர்ந்து இறப்பது என்பது இயற்கையானது.  ஆனால் சிலர் குறைந்த வயதிலேயே மரணம் அடைவதற்கு பல காரணங்கள் இருக்கும்.  இவற்றில் வியாதியால் மரணம் அடைவது முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த வியாதியை ஏற்படுத்துவதில் கொசுக்கள் அதிக பங்கு வகிக்கின்றன.  இவற்றால் மலேரியா, டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா போன்ற பல்வேறு வியாதிகள் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன.

தெருவோரம் கவனிக்க ஆளில்லாமல் கிடக்கும் நபரில் இருந்து பேரரசர் அலெக்சாண்டர் (மலேரியா நோயால் 32 வயதில் மரணம்) வரை யாரையும் இந்த கொசுக்கள் விட்டு வைப்பதில்லை.  அவற்றுக்கு மனிதர்களை போன்று வேற்றுமை என்பது இல்லை.

உலகில் மனிதர்களால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை வருடத்திற்கு 4.75 லட்சம்.  ஆனால் கொசுக்களால் 7.25 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு உள்ள தகவல் தெரிவிக்கின்றது.

இதனால் இந்த கொசுக்களை ஒழிப்பதற்கு உலகம் முழுவதும் தீவிரமுடன் போராடி வருகின்றனர்.  ஆனால் இவற்றை ஒழிக்க பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ரசாயன பொருட்கள் மனிதன், விலங்கு மற்றும் செடிகளுக்கு தீங்கு விளைவிப்பவையாக உள்ளன.

இந்த நிலையில், இதற்கு பதிலாக வேறு வகையில் கொசுக்களை ஒழிக்க விஞ்ஞானிகள் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.  இதன்படி, கொசுக்களின் இனப்பெருக்கத்தினை ஒழிக்கும் வகையிலான ஆண் கொசுக்களை ஆய்வகத்தில் உற்பத்தி செய்ய புது முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த வகை ஆண் கொசுக்கள் தீவிர இனப்பெருக்க செயல்களில் ஈடுபடும் தன்மையுடனும் ஆனால் மலடாக இருக்கும் வகையில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும்.

பெண் கொசுக்களே, மனிதர்களை கடித்து, ரத்தத்தினை உறிஞ்சி, வியாதியையும் பரப்புகின்றன.  இந்த பெண் கொசுக்கள் வாழ்நாளில் ஒரு முறையே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது.

இதனால் ஆய்வகத்தில் உற்பத்தியான மலடான ஆண் கொசுக்கள், பெண் கொசுக்களுடன் இணை சேரும்.  ஆனால் கொசுக்களின் இனவிருத்தி ஏற்படாது.  எனினும், தீவிர இனப்பெருக்க தன்மையுடன் ஆனால் மலடாக இருக்கும் வகையிலான கொசுக்களை உற்பத்தி செய்வது விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.

Next Story