ஜமால் கசோகி மீது புல்லட் பயன்படுத்தப் போவதாக இளவரசர் மிரட்டல்


ஜமால் கசோகி மீது புல்லட் பயன்படுத்தப் போவதாக இளவரசர் மிரட்டல்
x
தினத்தந்தி 8 Feb 2019 11:55 AM GMT (Updated: 8 Feb 2019 12:54 PM GMT)

ஜமால் கசோகி மீது புல்லட் பயன்படுத்தப் போவதாக இளவரசர் மிரட்டல் விடுத்து இருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாஷிங்டன்

சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கசோகி, துருக்கியில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவத்தில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய சவுதி, பின்னர் சாட்சியங்கள் எதிராக இருந்ததைத் தொடர்ந்து ஒப்புக்கொண்டது. எனினும், சவுதி இளவரசருக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியது. இதனைத் தொடர்ந்து, சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது தொடர்பாக ஐ.நா சபை விசாரணை நடத்தியது.

அதன் முதல்கட்ட அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த  அறிக்கையில், சவுதி அரேபியாவின் அதிகாரிகள் திட்டமிட்டு மிருகத்தனமாக ஜமாலைக் கொலை செய்துள்ளனர். மேலும் சவுதி, துருக்கி அரசுகள் இந்தக் கொலை குற்றத்தை விசாரிக்க அனுமதி அளிக்காமல் 13 நாட்கள் தாமதப்படுத்தியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கசோகி கொல்லப்படுவதற்கு முன்னரே அவரைக் கொல்ல சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் திட்டமிட்டிருந்ததாகவும், சவுதி அரசை விமர்சிப்பதை ஜமால் நிறுத்தவில்லை என்றால் அவர் மீது புல்லட் பயன்படுத்த இருப்பதாக கூறியதாகவும், அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விவகாரம் தற்போது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story