ராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு இளவரசி போட்டி


ராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு இளவரசி போட்டி
x
தினத்தந்தி 8 Feb 2019 11:30 PM GMT (Updated: 8 Feb 2019 7:31 PM GMT)

ராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் அடுத்த மாதம் (மார்ச்) பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் பதவிக்கு அந்நாட்டின் இளவரசி போட்டியிடுகிறார்.

பாங்காக், 

தாய்லாந்தில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் ஆட்சி கவிழ்க்கப்படுவதும், ராணுவம் அரியணை ஏறுவதும் தொடர்கதையாக உள்ளது.

அந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. பிரதமரை பதவி விலகக்கோரி நடந்த போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்தது.

இதற்கிடையில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் யிங்லக் ஷினவத்ராவின் பிரதமர் பதவியை பறித்து அந்நாட்டு அரசியல் சாசன கோர்ட்டு உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக வர்த்தக மந்திரி நிவாட்டம்ராங் பூன்சாங் நியமிக்கப்பட்டார். ஆனால் வலுவான தலைமை இல்லாததால் பெரும் அரசியல் குழப்பம் எழுந்தது.

இதையடுத்து அந்நாட்டின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ தளபதியாக இருந்த பிரயாட் சான்ஓசா பிரதமராக பொறுப்பேற்றார். நாட்டின் சட்டம், ஒழுங்கு சரியாகும் வரை மட்டுமே ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என கூறிய நிலையில் அங்கு ராணுவ ஆட்சியே தொடர்ந்தது.

பொதுத்தேர்தலை நடத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் குதித்தனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்படுவது வாடிக்கையானது.

இந்த நிலையில் பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் ஆணை பிறப்பித்தார். அதனை தொடர்ந்தது பிப்ரவரி மாதம் 24-ந்தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால் சில காரணங்களால் பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி 500 உறுப்பினர்களை கொண்டு தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் பொதுத்தேர்தல் என்பதால் அரசியல் கட்சியினரிடமும், தாய்லாந்து மக்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தாய்லாந்து இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று உப்லோரட்டனா மஹிடோல் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

முன்னாள் பிரதமர்கள் யிங்லக் ஷினவத்ரா, தாக்‌ஷின் ஷினவத்ரா ஆகியோருக்கு ஆதரவான தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சியின் வேட்பாளராக அவர் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்த சில மணி நேரத்தில் தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா தானும் களத்தில் இருப்பதாக அறிவித்தார்.

இதனால் இந்த பொதுத்தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உப்லோரட்டனா மஹிடோல் முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜின் கடைசி மகளும், தற்போதைய மன்னர் மஹா வஜ்ரலோங்கோனியின் சகோதரியும் ஆவார்.


Next Story