இந்தியா-சவுதி இடையேயான உறவு நமது மரபணுவிலேயே உள்ளது; இளவரசர் பேச்சுக்கு பிரதமர் ஒப்புதல்


இந்தியா-சவுதி இடையேயான உறவு நமது மரபணுவிலேயே உள்ளது; இளவரசர் பேச்சுக்கு பிரதமர் ஒப்புதல்
x
தினத்தந்தி 20 Feb 2019 10:17 AM GMT (Updated: 20 Feb 2019 10:17 AM GMT)

இந்தியா-சவுதி இடையேயான உறவு நமது மரபணுவிலேயே உள்ளது என இளவரசர் கூறியதற்கு பிரதமர் ஆம் என ஒப்புதல் வழங்கினார்.

புதுடெல்லி,

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆசிய நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார்.  இதன் ஒரு பகுதியாக இந்தியா வந்தடைந்த அவரை டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.

இதன்பின் ராஷ்டிரபதி மாளிகையில் சவுதி இளவரசர் சல்மானுக்கு வீரர்களின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.  அதன்பின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் இளவரசர் சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து பேசிய இளவரசர், இந்தியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே மிக பழமையான உறவுகள் உள்ளன.  இரு நாடுகளின் நன்மைக்காக இந்த உறவானது பராமரிக்கப்பட்டு மற்றும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதனை உறுதி செய்ய நாம் விரும்புகிறோம்.

வரலாறு எழுதப்படுவதற்கு முன், 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே இரு நாடுகளிடையே நட்புறவு இருந்து வந்துள்ளது என கூறினார்.

இளவரசரின் வலதுபுறம் பிரதமர் மோடி மற்றும் இடதுபுறம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் அமர்ந்திருந்தனர்.  இந்தியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவு நமது மரபணுவிலேயே உள்ளது என இளவரசர் கூறிய நிலையில், உடனடியாக பிரதமர் மோடியும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆம், ஆம் என ஆங்கிலத்தில் கூறினார்.

இளவரசருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பின் இரு நாடுகளிடையே உயர்மட்ட குழு அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது.

Next Story