விமானத்தை கடத்த வங்காளதேச நபர் முற்பட்டது ஏன்? புதிய தகவல்கள்


விமானத்தை கடத்த வங்காளதேச நபர் முற்பட்டது ஏன்? புதிய தகவல்கள்
x
தினத்தந்தி 25 Feb 2019 6:33 AM GMT (Updated: 25 Feb 2019 6:33 AM GMT)

விமானத்தை கடத்த வங்காளதேச நபர் முற்பட்டது ஏன்? என்பது பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

டாக்கா,

வங்காளதேச அரசுக்கு சொந்தமான விமான நிறுவனத்தின் ஒரு விமானம், 148 பயணிகளுடன், தலைநகர் டாக்காவில் இருந்து துபாய்க்கு நேற்று புறப்பட்டது. வழியில், கடலோர நகரமான சிட்டகிராம் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அங்கிருந்து கிளம்பிய சற்று நேரத்தில், பயணிகளுடன் அமர்ந்திருந்த ஒரு மர்ம நபர் திடீரென துப்பாக்கியுடன் எழுந்தார். விமானத்தை கடத்துவதாக அறிவித்தார்.

விமானிகள் இருக்கும் பகுதிக்குள் அவர் நுழைய முயன்றார். அவரை விமானிகள் தடுத்தபோது, அவர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. அவர் துப்பாக்கி முனையில் மிரட்டியதால், சிட்டகிராம் விமான நிலையத்துக்கே விமானம் மீண்டும் திரும்பியது. அங்கு அவசர, அவசரமாக தரை இறக்கப்பட்டது. பயணிகள் அவசர வழியாக வெளியேற்றப்பட்டனர். விமானத்திற்குள் புகுந்த கமோண்டா படையினர் மிரட்டிய மர்ம நபரை சுட்டு வீழ்த்தினர்.

இந்த நிலையில், விமானத்தை கடத்த வந்த ஆசாமி, மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே, விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானி காக்பிட் அறைக்குள் நுழைந்ததும், தனது மனைவியுடன் தனிப்பட்ட பிரச்சினை இருப்பதாகவும், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பேச விரும்புவதாகவும் கூறியுள்ளார்” இந்த தகவலை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். விமான  நிலையத்தின் பாதுகாப்பு கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story