ஆப்கானிஸ்தானில் தகவல் அமைச்சகம் மீது தாக்குதல்; 7 பேர் பலி - 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஆப்கானிஸ்தானில் தகவல் அமைச்சகம் மீது தாக்குதல்; 7 பேர் பலி - 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 21 April 2019 10:15 PM GMT (Updated: 21 April 2019 8:27 PM GMT)

ஆப்கானிஸ்தானில் தகவல் அமைச்சகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் பலியாயினர். அந்த சம்பவத்தில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மத்திய பகுதியில் அதிபர் மாளிகை, உள்துறை அமைச்சகங்கள் மற்றும் புகழ்பெற்ற நட்சத்திர ஓட்டல்கள் அமைந்துள்ளன. இதனால் இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இங்குள்ள தகவல் அமைச்சகம் அமைந்துள்ள வளாகத்திற்குள் துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளுடன் 4 பயங்கரவாதிகள் நுழைந்தனர். 18 மாடிகளை கொண்ட மிக உயரமான அமைச்சக கட்டிடத்தின் முன்பு சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள் வெடிக்க செய்தனர். அதனை தொடர்ந்து, அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே அமைச்சக கட்டிடத்துக்குள் நுழைய முயன்றனர்.

ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள், அவர்களை நுழையவிடாமல் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதற்கிடையில் அமைச்சக கட்டிடத்துக்குள் இருந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளை பத்திரமாக வெளியேற்றும் பணிகள் நடந்தது. சுமார் 6 மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையின் இறுதியில் பயங்கரவாதிகள் 4 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 போலீசார் மற்றும் அப்பாவி மக்கள் 4 பேர் பலியாகினர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற இருந்த அமைதிப் பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் நடத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story