

பிரபல சர்வதேச ஆடை பிராண்டான நைக் புதிதாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் டீ-ஷர்ட்களில் தமிழ் வாக்கியம் இடம்பெற்றுள்ளது.
சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த டீ-ஷர்ட்கள், அந்நாட்டின் புதிய பிரமாண்ட அடையாளமான ஜுவல் சாங்கி விமான நிலையக் கடைகளில் கிடைக்கின்றன.
கருப்பு, வெள்ளை என இரு வண்ணங்களில் கிடைக்கும் இந்த டீ- ஷர்ட்களில் தமிழ் தவறாக இடம்பெற்றிருப்பதாக இணையத்தில் சர்ச்சை கிளம்பியது. அதற்கேற்ப அப்போது இணையத்தில் இணைக்கப்பட்டிருந்த டீ-ஷர்ட் படங்களில் தமிழ் எழுத்துருக்கள் தவறாக இருந்தன.
ஆனால் அவை விற்பனைக்கு வைக்கப்பட்ட டீ-ஷர்ட்களின் படங்கள் இல்லை என்றும், முன்னதாக வெளியிடப்பட்ட மின் அறிக்கையில் இடம்பெற்ற படங்கள் என்றும் தெரியவந்துள்ளது.
தற்போது, ஜுவல் சாங்கியில் உள்ள நைக் கடையில் விற்கப்படும் டீ-ஷர்ட்களில் சும்மா செஞ்சு முடி என தெளிவான தமிழ் எழுத்துகளில் வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது.
நைக்கின் அடையாள வாக்கியமான ஜஸ்ட் டூ இட், இவ்வாறு ஆங்கிலம், தமிழ் தவிர, சீனம், மலாய் மொழிகளிலும் இடம்பெற்றுள்ளது.
டீ-ஷர்ட்களில் உள்ள தமிழ் எழுத்துகள் சரியாகப் பொறிக்கப்பட்டிருந்தாலும், ஜஸ்ட் டூ இட் என்ற வாக்கியத்துக்கு, சும்மா செஞ்சு முடி என்பது சரியான மொழிபெயர்ப்பா, அது பேச்சுவழக்கில் கூறு வதைப் போல அல்லவா இருக்கிறது என்ற சல சலப்புக் கிளம்பியிருக்கிறது.
செய்து விடு என்பது சிறப்பான மொழிபெயர்ப்பாக இருக்கும் அல்லவா?