இலங்கை போலீசாருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 3 பேர் எங்கள் அமைப்பினர்; ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு


இலங்கை போலீசாருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 3 பேர் எங்கள் அமைப்பினர்; ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு
x
தினத்தந்தி 28 April 2019 5:47 AM GMT (Updated: 28 April 2019 5:47 AM GMT)

இலங்கை போலீசாருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 3 பேர் எங்கள் அமைப்பினர் என ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பு,

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையான கடந்த 21ந்தேதி தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்ற போதிலும், தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது.

குண்டுவெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தொடர் சோதனைகளை இலங்கை பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு உள்ளனர்.

இந்நிலையில்,  கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு வீட்டில் பதுங்கி இருந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.  ஒரு மணிநேர சண்டைக்கு பின், அந்த வீட்டில் இருந்து 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் 6 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் மற்றும் 6 பேர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது.  இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

அதேவேளையில், இந்த சம்பவத்தில் பாதுகாப்பு தரப்பினருக்கு எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லையென போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அமேக் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இலங்கை போலீசாருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 3 பேர் எங்கள் அமைப்பினர்.  அவர்கள் தானியங்கி ஆயுதங்களுடன் போலீசாருடன் சண்டையில் ஈடுபட்டனர்.  வெடிபொருட்கள் தீர்ந்தபின் தங்களது உடல்களில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

Next Story