அடுத்த பிரதமர் என எதிர்பார்க்கப்படுபவர் வீட்டில் இரவில் கலாட்டா : இளம் காதலியுடன் சண்டை


அடுத்த பிரதமர் என எதிர்பார்க்கப்படுபவர் வீட்டில் இரவில் கலாட்டா : இளம் காதலியுடன் சண்டை
x
தினத்தந்தி 22 Jun 2019 7:16 AM GMT (Updated: 22 Jun 2019 7:16 AM GMT)

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் போரிஸ் ஜான்சன் வீட்டில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

லண்டன்,

போரிஸ் ஜான்சன் தனது இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்துவிட்டு கேரி சைமண்ட்ஸ் என்ற ஒரு இளம்பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு போரிஸ் ஜான்சனுக்கும் அவரது காதலிக்கும் கடும் சண்டை ஏற்பட்டுள்ளது.

வீட்டில் பொருட்கள் தூக்கி வீசப்படும் சத்தமும் கேரி சைமண்ட்ஸ், போரிஸ் ஜான்சனை பார்த்து வீட்டை விட்டு வெளியே போ, என்னைத் தொடாதே என்று கத்தும் சத்தமும் கேட்டதாக பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் தெரிவித்துள்ளதோடு, அந்த வீட்டில் நடந்தவற்றை தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதில் போரிஸ் ஜான்சன் தனது காதலியைப் பார்த்து, என்னுடைய லாப்டாப்பைத் தொடாதே என்று கத்துவதும் ஏதோ விழுந்து உடையும் சத்தமும் பதிவாகியுள்ளது. அதேபோல் போரிஸ் ஜான்சன் தனது சோபாவில் ஒயினைக் கொட்டி விட்டதாக புகார் கூறும் கேரி சைமண்ட்ஸ், நீ ரொம்ப மோசமானவன் உனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை, பணத்தைப் பற்றியும் உனக்கு கவலை இல்லை என்று கத்தியிருக்கிறார்.

அதன் பின்னர் கண்ணாடிப் பொருட்கள் உடையும் சத்தமும், கூச்சலும் வாக்குவாதமும் கேட்டிருக்கிறது. தான் அந்த வழியே சென்றபோது அதைக் கேட்டதாகத் தெரிவிக்கும் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், போரிஸ் ஜான்சன் வீட்டில் யாரோ யாரையோ கொலை செய்கிறார்கள் என்று நினைத்தாராம். எனவே அவர் சென்று போரிஸ் ஜான்சனின் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார். ஆனால் மூன்று முறை தட்டியும் யாரும் கதவைத் திறக்கவில்லையாம். எனவே அவர் போலீசாருக்கு தகவல் அளித்ததோடு, தனது மொபைல் போனில் பதிவு செய்ததை பத்திரிகை ஒன்றிற்கும் அளித்துள்ளார்.

சிறிது நேரத்தில் போலீசார் அங்கு குவிந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் போரிஸ் ஜான்சன் பிரதமராவதற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுகிறார்கள். ஆனால் காலையில் வீட்டை விட்டு வெளியே வந்த போரிஸ் ஜான்சன் எதுவும் நடக்காததுபோல் சிரித்துக் கொண்டே வந்ததுடன், கூட்டம் ஒன்றிலும் பங்கேற்றுள்ளார்.

Next Story