பரஸ்பர மிரட்டல்களால் ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம்


பரஸ்பர மிரட்டல்களால் ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம்
x
தினத்தந்தி 23 Jun 2019 7:30 PM GMT (Updated: 23 Jun 2019 7:07 PM GMT)

பரஸ்பர மிரட்டல்களால் ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

டெஹ்ரான்,

வல்லரசு நாடுகளுடன் ஈரான் ஏற்படுத்திக்கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம், தங்கள் நலனுக்கு எதிரானது என கூறி அமெரிக்கா விலகியது. அதைத்தொடர்ந்து ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தது. இந்த பொருளாதார தடை, ஈரானில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 20-ந் தேதி அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து இரு தரப்பும் வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஈரானின் 3 ராணுவ நிலைகள் மீது தாக்குதலுக்கு உத்தரவிட்டு பின்னர் அதன் விளைவுகள் குறித்து தெரிய வந்து, உத்தரவை வாபஸ் பெற்றதாக டிரம்ப் டுவிட்டரில் 2 தினங்களுக்கு முன் குறிப்பிட்டு சூடேற்றினார்.

இந்தநிலையில் ஈரான் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கோலமாலி ரஷீத், “அமெரிக்க படை வீரர்களின் உயிர்களை காக்க டிரம்ப் நிர்வாகம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். போர் மூண்டு விட்டால், அதன் நோக்கமும், கால அளவும் கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும்” என மிரட்டல் விடுத்தார். இதற்கு அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனும் பதிலடி கொடுத்து பேசினார்.

இப்படி இரு தரப்பினரும் மிரட்டல் விடுத்திருப்பது மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story