எத்தியோப்பியாவில் ராணுவ தளபதி சுட்டுக்கொலை - பிராந்திய ஆட்சித்தலைவரும் கொல்லப்பட்டார்


எத்தியோப்பியாவில் ராணுவ தளபதி சுட்டுக்கொலை - பிராந்திய ஆட்சித்தலைவரும் கொல்லப்பட்டார்
x
தினத்தந்தி 23 Jun 2019 10:45 PM GMT (Updated: 23 Jun 2019 7:41 PM GMT)

எத்தியோப்பியாவில் ராணுவ தளபதி சுட்டுக்கொல்லப்பட்டதுடன், பிராந்திய ஆட்சித்தலைவரும் கொல்லப்பட்டார்.

அடிஸ் அபாபா,

எத்தியோப்பியா நாட்டில் அம்ஹாரா என்ற மாகாணம் உள்ளது. அதன் ஆட்சித்தலைவராக அம்பாசெவ் மெகோனன் இருந்து வந்தார். அந்த மாகாணத்தில் அரசியல் நெருக்கடி காரணமாக அமைதியற்ற சூழல் நிலவி வந்தது. இந்த நிலையில் அங்கு ஒரு பிரிவினர் நேற்று முன்தினம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, பிராந்திய ஆட்சித்தலைவர் அம்பாசெவ் மெகோனன் ஒரு கூட்டத்தை நடத்தினார்.

இந்த கூட்டத்துக்குள் அந்த மாகாணத்தின் பாதுகாப்பு தலைவர் அசாமிநியு சிஜேவின் கூலிப்படை நுழைந்து, அம்பாசெவ் மெகோனனையும், அவரது ஆலோசகரையும் சுட்டுக்கொன்று விட்டனர். இதை எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமதுவின் செய்தி தொடர்பாளர் பில்லினி நேற்று தெரிவித்தார்.

அம்பாசெவ் மெகோனனும், அவரது ஆலோசகரும் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், எத்தியோப்பிய ராணுவ தளபதி சியாரே மெகோனனை, அவரது வீட்டில் வைத்து அவரது மெய்க்காப்பாளர் சுட்டுக்கொன்றார். இந்த படுகொலையில் மெய்க்காப்பாளர் உடனடியாக கைது செய்யப்பட்டு விட்டார். அதே நேரத்தில் பிராந்திய ஆட்சித்தலைவரையும், அவரது ஆலோசகரையும் சுட்டுக்கொல்ல வைத்த மாகாணத்தின் பாதுகாப்பு தலைவர் அசாமிநியு சிஜே தலைமறைவானார். எத்தியோப்பியாவில் அரசியல் நெருக்கடி முற்றி வருவதையே இந்த சம்பவங்கள் காட்டுவதாக அந்த நாட்டின் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


Next Story