இலங்கையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மரண தண்டனை


இலங்கையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மரண தண்டனை
x
தினத்தந்தி 26 Jun 2019 7:18 PM GMT (Updated: 26 Jun 2019 7:18 PM GMT)

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

கொழும்பு,

இலங்கையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அங்கு கடைசியாக கடந்த 1976-ம் ஆண்டில் கொலை குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்குப்பின் யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

ஆனால் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சம்பவங்களால் அங்கு குற்றங்கள் அதிகரித்து வருகிறது. எனவே போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மட்டும் மரண தண்டனையை நிறைவேற்ற அதிபர் சிறிசேனா முடிவு செய்தார்.

அதன்படி இந்த குற்றத்தில் ஈடுபட்ட 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றும் கோப்புகளில் நேற்று அவர் கையெழுத்து போட்டுள்ளார். அவர்களுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் மரண தண்டனை அமல்படுத்தப்படுகிறது.

உலக அளவில் மரண தண்டனையை ரத்து செய்யும் ஐ.நா.வின் தீர்மானத்தில் இலங்கை அரசு கடந்த 2016-ம் ஆண்டு கையெழுத்து போட்டு இருந்தது. அதையும் மீறி தற்போது மரண தண்டனையை மீண்டும் நிறைவேற்றும் நடவடிக்கையில் அந்த நாடு இறங்கியுள்ளது. இதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.


Next Story