ஜி 20 மாநாடு துவங்கியது: முக்கிய விவகாரங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை


ஜி 20 மாநாடு துவங்கியது:  முக்கிய விவகாரங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை
x
தினத்தந்தி 28 Jun 2019 6:17 AM GMT (Updated: 28 Jun 2019 6:17 AM GMT)

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 மாநாடு துவங்கியது. கூட்டத்தில் பங்கேற்க வந்த தலைவர்களை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வரவேற்றார்.

ஒசாகா,

ஜப்பானின் ஒசாகா நகரில் இன்றும் நாளையும் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதற்காக ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஒசாகா நகருக்கு வந்துள்ளனர். இன்று வரவேற்பு நிகழ்ச்சியுடன் உச்சிமாநாடு தொடங்கியது. 

அப்போது, ஜி-20 உறுப்பு நாடுகளின் தலைவர்களை, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனித்தனியாக வரவேற்று மேடைக்கு அழைத்தார். அவர்களுடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன்பின்னர், அனைத்து தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். புகைப்படம் எடுத்து முடிந்ததும் மாநாட்டின் முதல் அமர்வு தொடங்கியது. தலைவர்கள் ஒவ்வொருவராக உரையாற்றினர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசும்போது, ஜி20 நாடுகளின் தலைவர்கள் வர்த்தகத்திற்கு முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என பேசினார். வர்த்தக பாதுகாப்புவாதம் அதிகரித்து வருவதை சீன தலைவர் கடுமையாக எச்சரித்தார்.

இதேபோல் உலகளாவிய வர்த்தகத்தின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாகவும், தடையற்ற, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற வர்த்தகத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் ஜப்பான் பிரதமர் வலியுறுத்தினார்.  

இந்த மாநாட்டுக்கு இடையே, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கல், சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். 

Next Story