சிலி நாட்டின் தலைநகரம் குலுங்கியது சீர்திருத்தம் கோரி 10 லட்சம் பேர் பேரணி

சிலி நாட்டில் சீர்திருத்தம் கோரி, தலைநகரான சாண்டியாகோவில் 10 லட்சம் பேர் திரண்ட பிரமாண்ட பேரணி நடந்தது.
சாண்டியாகோ,
லத்தீன் அமெரிக்க நாடுகளில் செல்வச்செழிப்புள்ள நாடாக சிலி நாடு திகழ்கிறது. ஆனால் அங்கு வருமான சமத்துவம் இல்லாத நிலை உள்ளது.
ஓ.இ.சி.டி என்று அழைக்கப்படுகிற பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் 36 உறுப்பு நாடுகளில், சிலிதான் மிக மோசமான வருமான சமத்துவம் இல்லாத நாடு என்று கூறப்படுகிறது.
அங்கு முதலில் மெட்ரோ ரெயில் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டங்களில் தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. கொள்ளைகள் நடந்தன. ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கிய இந்த போராட்டத்தில் 16 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். 7 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த பெரும் போராட்டத்தின் காரணமாக மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
தலைநகர் சாண்டியாகோவில் பாதுகாப்பை ராணுவம் எடுத்துக்கொண்டது. அங்கு நெருக்கடி நிலையும் அமல்படுத்தப்பட்டது. இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 20 ஆயிரம் போலீசார், வீதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று அங்கு வாழ்க்கைச்செலவுகள் அதிகரிப்பு, சமத்துவம் இல்லாமை ஆகியவற்றால் ஏற்படுகிற அவதிகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல பிரமாண்ட அமைதிப்பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு ஆனது.
10 லட்சம் பேர் திரண்டனர்
தலைநகர் சாண்டியாகோவில் நேற்று அந்த பேரணி நடந்தது. 10 லட்சம் பேர் திரண்டதால் அந்த நகரமே குலுங்கியது.
இது குறித்து சாண்டியாகோ கவர்னர் கர்லா ரூபிலர் கூறும்போது, “தலைநகரில் 10 லட்சம் பேர் திரண்டுள்ளனர். இது நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதத்தை விட அதிகம் ஆகும்” என்றார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் புதிய சிலிக்கான கனவை போராட்டக்காரர்கள் பிரதிபலித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
போராட்டக்காரர்களில் ஒருவரான பிரான்சிஸ்கோ ஆங்கிதார் என்பவர் கருத்து தெரிவித்தபோது, “நாங்கள் நீதி கேட்கிறோம். நேர்மை வேண்டும் என்கிறோம். நெறிமுறை சார்ந்த அரசு வேண்டும் என்று கேட்கிறோம்” என கூறினார்.
சிலி அதிபர் செபாஸ்டியன் பினேரா டுவிட்டரில் கருத்து தெரிவிக்கையில், “ நாங்கள் அனைவரும் மாறி விட்டிருக்கிறோம். இந்த பேரணி மகிழ்ச்சிகரமானது; அமைதிப்பேரணி. இதில் சிலி மக்கள் மிகவும் நியாயமான, ஒன்றுபட்ட சிலியை கேட்கிறார்கள். இது எதிர்காலத்தில் நம்பிக்கைக்கான பாதைகளை திறக்கிறது” என குறிப்பிட்டார்.
பேரணியின்போது அதிபர் மாளிகை முன்னர் ஏராளமானோர் கூடி விட்டதாகவும், அவர்களை போலீசார் விரட்டியடித்ததாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.
Related Tags :
Next Story






