இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கவர்னர் ஆகிறார்


இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கவர்னர் ஆகிறார்
x
தினத்தந்தி 27 Nov 2019 8:15 PM GMT (Updated: 28 Nov 2019 12:13 AM GMT)

இலங்கையின் வடக்கு மாகாண கவர்னராக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொழும்பு,

இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி பெற்றார். புதிய அதிபராக பதவியேற்றுள்ள அவர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் வடக்கு மத்திய மாகாணங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க முடிவு செய்துள்ளார்.

இதில் வடக்கு மாகாணத்தின் கவர்னராக முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் (வயது 47) நியமிக்கப்பட இருப்பதாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக முரளிதரனை தனிப்பட்ட முறையில் அழைத்து பேசிய கோத்தபய ராஜபக்சே, வடக்கு மாகாண கவர்னர் பதவியை ஏற்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளரான முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையாளர் ஆவார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதற்கிடையே இலங்கையின் கிழக்கு மாகாண கவர்னராக அனுராதா யகம்பத், வடக்கு மத்திய மாகாண கவர்னராக திசா விதரனா ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளதாக அதிபர் மாளிகை அறிவித்து உள்ளது.

Next Story