ஈராக்கில் போராட்டக்காரர்கள் வன்முறை; ஈரான் தூதரகத்திற்கு தீ வைத்தனர்

ஈராக்கில் கடந்த 2 மாதங்களாக அரசுக்கு எதிராக கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஈராக்கில் போராட்டக்காரர்கள் வன்முறை; ஈரான் தூதரகத்திற்கு தீ வைத்தனர்
Published on

நஜாப்,

நாட்டில் ஊழல் மற்றும் வறுமை ஒழிக்கப்பட வேண்டும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஈராக் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைகளில் இதுவரை 350 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், ஈராக்கில் உள்ள நஜாப் நகரில் அமைந்துள்ள ஈரான் தூதரகத்தை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்தனர். போராட்டக்காரர்களை விரட்டியடிக்க கண்ணீர் புகை குண்டுகளை பாதுகாப்பு படையினர் வீசினர். எனினும், தூதரகம் அமைந்துள்ள கட்டிடத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றி விட்டு கட்டிடத்திற்கு தீ வைத்தனர்.

தீ கொழுந்து விட்டு எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் போல காட்சி அளித்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர். ஈராக்கிற்கு வெற்றி , ஈரான் வெளியேறிவிட்டது என்ற கோஷங்களையும் போராட்டக்காரர்கள் எழுப்பினர்.

முன்னதாக, இந்த மாத துவக்கத்தில் ஈராக்கின் கர்பலா நகரில் உள்ள ஈரான் தூதரகம் போராட்டக்காரர்களால் குறிவைக்கப்பட்டது. அப்போது, பாதுகாப்பு படையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில், 4 பேர் பலியாகினர்.

ஈராக்கில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com