அமெரிக்காவில் பிரபல இந்திய சமையல்கலை நிபுணர் கொரோனாவுக்கு பலி


அமெரிக்காவில் பிரபல இந்திய சமையல்கலை நிபுணர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 27 March 2020 12:15 AM GMT (Updated: 27 March 2020 12:15 AM GMT)

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல இந்திய சமையல்கலை நிபுணர் உயிரிழந்தார்.

நியூயார்க், 

உலக அளவில் ஆயிரக்கணக்கானோரின் உயிரை பறித்துள்ள கொரோனா அமெரிக்காவிலும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. அங்குள்ள நியூயார்க் மாகாணத்தில் மட்டும் 300-க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இந்தியாவை சேர்ந்த பிரபல சமையல் கலை நிபுணர் பிளாய்ட் கார்டோஸ்(வயது 59) நேற்றுமுன்தினம் பலியானார்.

மும்பையில் அவரது உணவகங்களை நடத்தி வரும் நிறுவனம் இந்த தகவலை உறுதிபடுத்தி உள்ளது.

அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூயார்க் மாகாணத்தில் உள்ள நியூஜெர்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த கார்டோஸ் உயிரிழந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவர் இந்தியா வந்தபோது அவருடன் உரையாடிய நபர்களிடம், கொரோனா தாக்குதலால் கார்டோஸ் பலியானது குறித்து தெரிவித்துள்ளோம். அவர்களுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் அல்லது மருத்துவ ஆலோசனைகளை பெறுங்கள் என்று கூறியுள்ளோம். மேலும் இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறைக்கும் தகவல் தெரிவித்து இருக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

கடந்த 8-ந் தேதி மும்பையில் இருந்து அமெரிக்கா சென்ற கார்டோஸ், காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளதாக 18-ந் தேதி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பையை சேர்ந்த பிளாய்ட் கார்டோஸ் உயிர் வேதியியல் தொடர்பான படிப்பை படித்ததால், அவரை விஞ்ஞானியாக்க பெற்றோர் ஆசைப்பட்டனர். ஆனால் கார்டோசுக்கு சமையல் கலை மீது அதீத ஆர்வம். இதனால் மேற்கொண்டு அவர் சமையல் கலை தொடர்பான படிப்பை பயின்றார். இந்தியாவிலும், சுவிட்சர்லாந்திலும் சமையல் தொழில் நுட்பங்களை கற்றுக் கொண்ட கார்டோஸ், மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பணியாற்றினார். பின்னர் நியூயார்க்கில் கிரே குன்ஸ் என்ற பிரபல சமையல்கலை நிபுணரிடம் பன்னாட்டு சமையல் வித்தைகளை கற்றுக்கொண்டார்.

நியூயார்க்கில் 1998-ம் ஆண்டு டேனி மேயர் என்பவருடன் இணைந்து ஓட்டலை தொடங்கினார். இந்திய மசாலா வகைகளை எல்லாம் வெளிநாட்டு உணவு வகைகளில் கலந்து சமைத்தார்.

பின்னர் 2015-ம் ஆண்டு மும்பையில் சொந்தமாக உணவகங்களை திறந்தார். இந்தநிலையில் இந்த மாத தொடக்கத்தில் மும்பையில் புதிதாக இனிப்பு கடையையும் திறந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டுதான் அவர் ஜெர்மனி வழியாக விமானத்தில் அமெரிக்கா சென்றார்.

கடந்த 2011-ம் ஆண்டில் நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச சமையல் போட்டியில் பங்கேற்ற கார்டோஸ் தென்னிந்திய உணவான உப்புமாவை சமைத்து, முதல் பரிசை தட்டிச் சென்று உலகப்புகழ் பெற்றார்.

இந்த போட்டியில் வென்றதற்காக வழங்கப்பட்ட ரூ.45 லட்சத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நலநிதிக்கு நன்கொடையாக வழங்கினார். அவருடைய தந்தை புற்றுநோயால், இறந்ததால், அவரது நினைவாக அந்த தொகையை நன்கொடையாக அளித்தார். கார்டோசுக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Next Story