இத்தாலியில் கொரோனா வைரசிலிருந்து குணமடைந்த 101 வயது முதியவர்


இத்தாலியில் கொரோனா வைரசிலிருந்து குணமடைந்த 101 வயது முதியவர்
x
தினத்தந்தி 28 March 2020 12:15 AM GMT (Updated: 27 March 2020 11:53 PM GMT)

இத்தாலியில் 101 வயதான முதியவர் ஒருவர், கொரோனா வைரசில் இருந்து குணமடைந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரோம், 

கொரோனா வைரசால் ஐரோப்பிய நாடான இத்தாலி பெரும் உயிரிழப்பை சந்தித்துள்ளது. இதுவரை இத்தாலியில் மட்டும் கொரோனா வைரசுக்கு 8,000 பேர் வரை பலியாகியுள்ளனர். இத்தகைய மோசமான இறப்பு விகிதத்துக்கு அங்கு முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதே முக்கிய காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் முதியவர்களே அதிகமாக உயிரிழக்கின்றனர்.

இந்த நிலையில் இத்தாலியில் 101 வயதான முதியவர் ஒருவர், கொரோனா வைரசில் இருந்து குணமடைந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஊடகங்களால் மிஸ்டர் ‘பி’ என்று குறிப்பிடப்படும் அந்த நபர், 1919-ம் ஆண்டு பிறந்தவர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ரிமினி நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மிஸ்டர் ‘பி’ பூரண குணமடைந்து, நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.

இந்த தகவலை ரிமினி பகுதியின் துணை மேயர் குளோரியா லிசி உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘கொரோனா வைரசில் இருந்து குணமடைந்த நபரிடமிருந்து அனைவருக்குமான எதிர்கால நம்பிக்கையை உணர்கிறோம். இந்த வாரம் ஏராளமான சோக செய்திகளை பார்த்து வந்தோம். அதுவும் வயதானவர்களிடமும் இந்த வைரசின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் அவர் குணமடைந்துள்ளார்’ என்றார்.

Next Story