உலக செய்திகள்

இளவரசர் சார்லசை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா; பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது + "||" + Corona to the Prime Minister of England following Prince Charles; Confirmed in the experiment

இளவரசர் சார்லசை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா; பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது

இளவரசர் சார்லசை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா; பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் சர்வதேச நாடுகள் திணறி வருகின்றன. இங்கிலாந்தில் இளவரசர் சார்லசை தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டன், 

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இப்போது 199 நாடுகளில் பரவி விட்டது.

இங்கிலாந்து நாட்டிலும் இந்த வைரஸ் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவற்றை கொண்ட யு.கே. என்று அழைக்கப்படுகிற ஐக்கிய ராஜ்ஜியத்தில் இந்த வைரஸ், இதுவரை 11 ஆயிரத்து 658 பேரை பாதித்துள்ளது. 578 உயிர்களை பலி கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கிவிடாமல் இருக்க இங்கிலாந்து நாட்டின் ராணியான இரண்டாம் எலிசபெத்தும், அவரது கணவர் பிலிப்பும் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியேறி, வின்ட்சர் கோட்டையில் பாதுகாப்பாக உள்ளனர்.

ஆனால் அவர்களது மூத்த மகன் இளவரசர் சார்லசுக்கு (வயது 71) கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த 26-ந்தேதி உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவியும் இளவரசியுமான கமிலாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும் இருவரும் பால்மோரல் எஸ்டேட் மாளிகையில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இளவரசர் சார்லசை தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (55) கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது நேற்று உறுதியானது.

இதையொட்டி அவர் டுவிட்டரில் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கடந்த 24 மணி நேரத்தில் எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கான லேசான அறிகுறிகள் தென்பட்டன. நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரியான பேராசிரியர் கிறிஸ் விட்டியின் ஆலோசனையின் பேரில் பரிசோதனை செய்துகொண்டேன். அதில் எனக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

என்னை நான் தனிமைப் படுத்திக்கொண்டு, எனது இல்லத்தில் இருந்து கொண்டு வேலை செய்வேன். அதுதான் செய்ய வேண்டிய சரியான செயல் ஆகும்.

என்னால் தொடர்ந்து செயல்பட முடியும். இதற்காக நவீன தொழில் நுட்பத்துக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். தேசிய அளவில் கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவதில் நான் எனது குழுவை வழிநடத்துகிற வகையில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வேன். இவ்வாறு அதில் அவர் கூறி இருந்தார்.

போரிஸ் ஜான்சன்தான், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள முதல் உலக தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபிக்கும் கொரோனா வைரஸ் பாதித்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிய வந்தது நினைவுகூரத்தக்கது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது குறித்து அரசு செய்திதொடர்பாளர் கூறுகையில், “எண்.10, டவுனிங் வீதியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை தேசிய சுகாதார பணி ஊழியர்கள் மேற்கொண்டனர். அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதியானது. பிரதமர், தனது இல்லத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். கொரோனா வைரசுக்கு எதிராக போராட காணொலி காட்சி வழியான சந்திப்புகள் மூலம் அரசின் செயல்பாடுகளை அவர் தொடர்ந்து தலைமை தாங்கி நடத்திச்செல்வார்” என கூறினார்.

பிரதமர் இல்ல செய்தி தொடர்பாளர் கூறுகையில், “பிரதமருக்கான உணவுகள், வேலை செய்வதற்கான ஆவணங்கள் அவரது அறையின் கதவுக்கு அருகே வைக்கப்படும்” என தெரிவித்தார்.

இதற்கிடையே கர்ப்பமாக உள்ள போரிஸ் ஜான்சனின் வருங்கால காதல் மனைவி கேரி சைமண்ட்ஸ், எங்கோ ஒரு இடத்தில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் கடைசியாக கடந்த 11- ந் தேதி சந்தித்துள்ளார்.

அவரது நலனையொட்டிய அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்றி, ராணி இரண்டாம் எலிசபெத் நலமாக உள்ளார் என்று இங்கிலாந்து அரண்மனை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இங்கிலாந்து நாட்டின் சுகாதார மந்திரி மேத் ஹான்காக்குக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

போரிஸ் ஜான்சன், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வர இந்திய பிரதமர் நரேந்திர மோடி செய்தி வெளியிட்டுள்ளார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பிற்குரிய பிரதமர் போரிஸ் ஜான்சன், நீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள். உங்கள் ஆரோக்கியத்துக்காகவும், ஆரோக்கியமான இங்கிலாந்தை உறுதி செய்வதற்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்” என கூறி உள்ளார்.