ஈரானில் சிறையை உடைத்து 54 கைதிகள் தப்பியோட்டம்


ஈரானில் சிறையை உடைத்து 54 கைதிகள் தப்பியோட்டம்
x
தினத்தந்தி 31 March 2020 12:31 AM GMT (Updated: 31 March 2020 12:31 AM GMT)

ஈரானில் சிறைக்காவலர்களை கடுமையாக தாக்கிவிட்டு 54 கைதிகள் சிறை உடைத்து தப்பியோடினர்.

டெஹ்ரான், 

ஈரானின் குர்திஸ்தான் மாகாணம் சகேஸ் நகரில் மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. இங்கு கொலை குற்றவாளிகள் உள்பட ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிறையில் சிறைக்காவலர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கைதிகள் சிலர் திடீர் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் சிறைக்காவலர்களை கடுமையாக தாக்கிவிட்டு சிறை உடைத்து தப்பியோடினர்.

இப்படி 74 கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடினர். இதையடுத்து, கூடுதல் போலீஸ் படை வரவழைக்கப்பட்டு அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதில் 20 கைதிகள் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எனினும் மற்ற 54 கைதிகள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைதிகள் சிறையை உடைத்து தப்பிச் சென்ற விவகாரத்தில் சிறைக்காவலர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக 4 சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Next Story