கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.நா. சார்பில் இந்தியாவுக்கு குவியும் உதவிகள்


கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.நா. சார்பில் இந்தியாவுக்கு குவியும் உதவிகள்
x
தினத்தந்தி 7 May 2021 11:42 PM GMT (Updated: 7 May 2021 11:42 PM GMT)

யுனிசெப் உள்ளிட்ட ஐ.நா.வின் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் இந்தியாவுக்கு அதிகமான உதவிகள் அனுப்பப்பட்டு உள்ளன.

உலக நாடுகள் உதவி

கொரோனாவின் 2-வது அலையில் சிக்கியிருக்கும் இந்தியாவை மீட்டெடுப்பதற்காக பல்வேறு உலக நாடுகள், சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றன. குறிப்பாக ஆக்சிஜன் தயாரிப்பு அலகுகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் போன்ற மருத்துவ தளவாடங்களை அனுப்பி வைத்து தங்கள் உடனிருப்பை உணர்த்தி வருகின்றன. 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த உதவிகளை அளித்துள்ளன.

ஆக்சிஜன் செறிவூட்டிகள், முககவசங்கள்

இதன் தொடர்ச்சியாக ஐ.நா.வின் பல்வேறு நிறுவனங்களும் இந்தியாவுக்கு ஏராளமான உதவிகளை அனுப்பியுள்ளன. அந்தவகையில் யுனிசெப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.நா. மக்கள் நிதியம் இணைந்து 10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகள், 1 கோடி மருத்துவ முககவசங்கள், 15 லட்சம் முக பாதுகாப்பு கவசங்கள் ஆகியவற்றை அனுப்பி வைத்துள்ளன. இதைத்தவிர தடுப்பூசிகளை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு தேவையான குளிரூட்டும் அலகுகளையும் யுனிசெப் வழங்கியிருக்கிறது. அத்துடன் வென்டிலேட்டர், ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளையும் ஐ.நா. குழு வழங்கி இருக்கிறது.

கூடாரங்கள், படுக்கைகள்

இதைப்போல கொரோனா பரிசோதனை கருவிகள், விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் வெப்ப பரிசோதனை கருவிகள் போன்றவற்றை ஐ.நா. நிறுவனங்கள் வழங்கி உள்ளன. மேலும் தற்காலிக ஆஸ்பத்திரிகள் அமைப்பதற்காக கூடாரங்கள், படுக்கைகளை உலக சுகாதார நிறுவனம் வழங்கி இருக்கிறது. இவை மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் உதவுவதற்காக ஐ.நா.வின் சிறப்புக்குழுவினர் களத்திலும் இறங்கி பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தேசிய அளவிலும், உள்ளூர் மட்டத்திலும் இந்த மருத்துவ நிபுணர்கள் களத்தில் உள்ளனர்.

தடுப்பூசி மைய கண்காணிப்பு

இதைப்போல நாடு முழுவதும் 1.75 லட்சம் தடுப்பூசி மையங்களை மேற்பார்வையிடும் பணிகளுக்கு யுனிசெப் மற்றும் ஐ.நா. வளர்ச்சி திட்டம் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த தகவல்களை ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளரான ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக, கொரோனாவால் இந்தியாவில் நீடித்து வரும் பயங்கரமான சூழல் அனைவருக்கும் எச்சரிக்கை மணியை ஒலித்திருப்பதாக யுனிசெப் நிறுவன செயல் இயக்குனர் ஹென்ரியட்டா கூறியிருந்தார். இந்த நேரத்தில் இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவாவிடில் இந்த பிராந்தியம் மற்றும் ஒட்டுமொத்த உலகிலும் இந்த பாதிப்பு எதிரொலிக்கும் என அவர் எச்சரிக்கையும் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Next Story