‘உலக நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை எதிர்க்க வேண்டும்’; ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ரட்


‘உலக நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை எதிர்க்க வேண்டும்’; ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ரட்
x
தினத்தந்தி 29 May 2021 5:51 PM GMT (Updated: 29 May 2021 5:51 PM GMT)

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது பல நாடுகள் அந்நாட்டை விசாரணை கூண்டில் நிற்க வைக்க விரும்பின. அவற்றில் ஒன்று ஆஸ்திரேலியா.

நோய்த்தொற்று உருவானது குறித்து சீனாவிடம் விசாரணை நடத்த ஆஸ்திரேலியா தொடர்ந்து வற்புறுத்தியது. அப்போது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இரு நாடுகள் இடையிலான உறவு‌ மோசமடைந்துள்ளது. இந்த நிலையில் உலக நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை எதிர்க்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ரட் தெரிவித்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியின்போது இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘சீனாவின் வளரும் பொருளாதாரம் மற்றும் புவிசார் வற்புறுத்தலை நாடுகள் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும்; தனி ஒரு நாடாக சீனாவை எதிர்த்தால் அந்நாட்டைச் சீனா தண்டிக்கும்’’ என கூறினார்.

மேலும் மனித உரிமைகள் தொடர்பான விஷயங்களில் மேற்கத்திய நாடுகள் சீனாவை எதிர்க்க தயங்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.அவர் தொடர்ந்து பேசுகையில் “உலக நாடுகளுக்கு சீனாவுடன் எதிர்ப்பு இருந்தால், தனியாக எதிர்ப்பதை காட்டிலும் பிற நாடுகளுடன் இணைந்து சீனாவை எதிர்ப்பதே சிறந்தது. அப்போதுதான் சீனா அந்த நாட்டுக்கு எதிரான இருதரப்பு கொள்கையை செயல்படுத்த இயலாது”  என கூறினார்.


Next Story