ஆப்கான் சிறுமிகள் மேல்நிலை கல்வி கற்க விரைவில் அனுமதி- தலீபான்கள் உறுதி


ஆப்கான் சிறுமிகள் மேல்நிலை கல்வி கற்க விரைவில் அனுமதி- தலீபான்கள் உறுதி
x
தினத்தந்தி 17 Oct 2021 1:29 AM GMT (Updated: 17 Oct 2021 1:29 AM GMT)

ப்கானிஸ்தானில் உள்ள அனைத்து சிறுமிகளும் மேல்நிலை கல்வி கற்க தலீபான்கள் விரைவில் அனுமதி வழங்குவார்கள் என ஐ.நா.வின் மூத்த அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காபூல்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி தலீபான்கள் நாட்டை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு ஆட்சியில் இருந்த ஜனநாயக அரசை அகற்றிவிட்டு புதிய இடைக்கால அரசை தலீபான்கள் அமைத்துள்ளனர். தலீபான்களின் கடந்த ஆட்சியின் (1996-2001) போது பெண்கள் கல்வி கற்க மற்றும் வேலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் இந்த முறை தங்கள் ஆட்சியில் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படும் என தலீபான்கள் உறுதியளித்துள்ளனர். அதன்படி ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து சிறுமிகளும் மேல்நிலை கல்வி கற்க தலீபான்கள் விரைவில் அனுமதி வழங்குவார்கள் என ஐ.நா.வின் மூத்த அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். யுனிசெப் துணை நிர்வாக இயக்குனர் ஓமர் அப்தி இது குறித்து கூறுகையில் ‘‘நான் கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தேன். 

அப்போது தலீபான்களுடனான சந்திப்பில், ஆப்கான் சிறுமிகள் அனைவரும் விரைவில் மேல்நிலை கல்வி கற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று எனக்கு அவர்கள் உறுதி அளித்தனர். அனைத்து சிறுமிகளும் 6-ம் வகுப்புக்கு அப்பால் தங்கள் பள்ளிப் படிப்பைத் தொடர ஒரு கட்டமைப்பை உருவாக்கி வருவதாகவும், ஓரிரு மாதங்களுக்குள் அது இறுதி செய்யப்படும் என்றும் தலீபான்கள் தெரிவித்தனர்’’ என கூறினார்.


Next Story