வன்முறையை தூண்டும் கருத்து - எத்தியோப்பிய பிரதமரின் பதிவை நீக்கிய பேஸ்புக்

எத்தியோப்பிய அதிபர் தனது பேஸ்புக் பக்கத்தில் வன்முறையை தூண்டும் வகையில் வெளியிட்ட பதிவு நீக்கப்பட்டுள்ளது.
வன்முறையை தூண்டும் கருத்து - எத்தியோப்பிய பிரதமரின் பதிவை நீக்கிய பேஸ்புக்
Published on

ஏடிஸ் அபாபா,

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு எத்தியோப்பியா. இந்நாட்டின் டைக்ரே மாகாணத்தில் டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி என்ற போராளி அமைப்பு உள்ளது.

இந்த அமைப்பில் இருப்பவர்கள் எத்தியோப்பிய துணை ராணுவப்படையில் இருந்தவர்கள் ஆவர். அந்நாட்டின் தற்போதைய பிரதமர் அபி அகமது ஆட்சி அதிகாரிகாரத்திற்கு வருவதற்கு முன்பாக இந்த அமைப்பினர் எத்தியோப்பிய அரசியல் சக்தியாக விளக்கினர். ஆனால், அபி அகமது பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி அமைப்பு ஒடுக்கப்பட்டு வந்தது. இதனால், அந்த அமைப்பிற்கும் எத்தியோப்பிய அரசுக்கும் இடையே மோதல் வெடித்தது.

டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியை ஒடுக்குவதற்கு அந்த நாட்டின் பிரதமர் அபி அகமது உத்தரவின்பேரில் ராணுவம் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆனால், டைக்ரே போராளிகள் குழுவும் சண்டையில் முன்னேறி வருகிறது. தலைநகர் ஏடிஸ் அபாபாவை கைப்பற்றும் நோக்கத்தோடு டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி படை சண்டையிட்டு வருகிறது.

இந்நிலையில் பிரதமர் அபி அகமது நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பொதுமக்கள் அனைவரும் வெகுண்டெழுந்து டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி அமைப்பினரை மண்ணுக்குள் புதைக்க வேண்டும். எத்தியோப்பியாவுக்காக இறக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது என தெரிவித்திருந்தார்.

டைக்ரே போராளிகளுக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதலை நடத்த வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு பிரதமர் அபி அகமது அழைப்பு விடுத்திருந்தார். பேஸ்புக்கில் 35 லட்சம் பேரால் பின்பற்றப்படும் பிரதமர் அபி தனது பேஸ்புக் பக்கத்தில் வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் இருந்த பிரதமர் அகமதின் பதிவை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. பேஸ்புக் விதிகளை மீறி வன்முறையை தூண்டும் வகையில் கருத்து இருந்ததால் பிரதமரின் பதிவு நீக்கப்பட்டதாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com