ஆஸ்திரேலியாவில் 2-வது நாளாக 230 திமிங்கலங்கள் இன்று கரை ஒதுங்கின


ஆஸ்திரேலியாவில் 2-வது நாளாக 230 திமிங்கலங்கள் இன்று கரை ஒதுங்கின
x

Image Courtesy: reuters

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவில் இன்று 2-வது நாளாக 230 திமிங்கலங்கள் கரை ஒதுங்கி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.



மெல்போர்ன்,


ஆஸ்திரேலியா நாட்டின் டாஸ்மேனியா தீவில் உள்ள மேக்வாரி துறைமுகத்துக்கு அருகே உள்ள கடற்கரையில் நேற்று முன்தினம் 200-க்கும் கூடுதலான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் பாதிக்கும் அதிகமான திமிங்கலங்கள் உயிருடன் இருந்தன.

எனவே அவற்றை மீட்டு மீண்டும் கடலுக்குள் விடுவதற்கான முயற்சிகளில் கடற்படையினரும், தன்னார்வலர்களும் ஈடுபட்டனர். எனினும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ள இடம் சிக்கலான பகுதியாக இருப்பதால் மீட்பு குழுக்களால் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை என கூறப்படுகிறது. அதே சமயம் உள்ளூர் மக்கள் கரை ஒதுங்கிய திமிங்கலங்களை போர்வையால் மூடியும், வாளிகளில் தண்ணீர் ஊற்றியும் அவற்றை உயிருடன் வைத்திருப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவில் இன்று 2-வது நாளாக 230 திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உள்ளன. மேற்கு கடலோர பகுதியில் ஒதுங்கிய இவை பைலட் வகை திமிங்கலங்கள் என அறியப்பட்டு உள்ளன. அவற்றில் 50 சதவீதம் வரை உயிரிழந்து இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

கடல் பாதுகாப்பு நிபுணர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று அவற்றை மீட்க முயன்றனர். அவை கரை ஒதுங்கி இருப்பது சிக்கலான பகுதி என கூறப்படுகிறது. அதனால், தேவைப்பட்டால் பொதுமக்களை உதவிக்கு அழைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு அண்டை நாடான நியூசிலாந்து நாட்டில், டால்பின் மற்றும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கும் விகிதம் உலகளவில் அதிகம். அந்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான பாலூட்டி இனங்கள் கரை ஒதுங்குகின்றன. ஆனால், பீச் பகுதிகளில் அவை ஏன் ஒதுங்குகின்றன என்பதற்கான காரணம் இன்னும் அறியப்படாத மர்ம நிகழ்வாகவே உள்ளது.

ஆஸ்திரேலியாவில் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே டாஸ்மேனியா தீவு கடற்கரையில் 500-க்கும் கூடுதலான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் 100 திமிங்கலங்கள் மட்டுமே உயிர் பிழைத்தன.

ஆஸ்திரேலியாவின் ஹேமலின் பே என்ற கடற்கரையில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் இறுதியில் 150 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் 135 திமிங்கலங்கள் உயிரிழந்தன. 15 திமிங்கலங்களையே அதிகாரிகளால் காப்பாற்ற முடிந்தது.

இதுபற்றி கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, பொதுவாக ஹேப் எனப்படும் ஒரு வகை கிருமி தொற்றால் பாதிக்கப்படும் திமிங்கலங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு கரை ஒதுங்கும். தவிர, இரை தேடி முன்னே செல்லும் திமிங்கலம் வழி தவறி சென்று விட்டால், அதனை பின்தொடர்ந்து செல்லும் திமிங்கலங்களும் வழி தவறி கரை ஒதுங்கும் என்று கூறுகின்றனர்.


Next Story