வங்காளதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கியதில் 3 பேர் பலி - மீட்புப்பணி தீவிரம்!


வங்காளதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கியதில் 3 பேர் பலி - மீட்புப்பணி தீவிரம்!
x

Image Credit:www.ndtv.com

தினத்தந்தி 4 Oct 2022 10:37 AM GMT (Updated: 4 Oct 2022 10:38 AM GMT)

கடலில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காணாமல் போயுள்ளனர்.

டாக்கா,

வங்காளதேசத்தில் ரோஹிங்கியா இன மக்கள் தங்கியிருக்கும் அகதிகள் முகாம்களில் மோசமான நிலைமை உள்ளது. ஆகவே ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான அகதிகள், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுத்து தப்பிக்கின்றனர்.

இந்த நிலையில், ரோஹிங்கியா அகதிகள் சுமார் 65 பேரை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை ஒரு மீன்பிடி இழுவை படகு புறப்பட்டு மலேசியா நோக்கிச் சென்றது. அப்போது மோசமான வானிலை காரணமாக அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் மூழ்கியது.

காக்ஸ் பஜார் மாவட்ட கடற்கரையில் படகு மூழ்கியது.அளவுக்கு அதிகமான பாரம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கடலில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காணாமல் போயுள்ளனர். இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், கடலில் மூழ்கியவர்களை மீட்க இரண்டு கடலோர காவல்படை தேடுதல் படகுகள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த விபத்தில் சிக்கிய 41 ரோஹிங்கியா அகதிகள் மற்றும் 4 வங்கதேசத்தினர் உட்பட 45 பேரை மீட்டுள்ளோம். கிட்டத்தட்ட 20 பேரை இன்னும் காணவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் சிக்கி கடலில் மூழ்கிய மூன்று இளம்பெண்களின் உடல்கள் ஹல்பூனியா நகரின் கடற்கரையில் கரை ஒதுங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story