இஸ்ரேலில் மக்கள் மீது காரை மோதி தாக்குதல்; 5 பேர் படுகாயம்


இஸ்ரேலில் மக்கள் மீது காரை மோதி தாக்குதல்; 5 பேர் படுகாயம்
x

இஸ்ரேலில் மக்கள் மீது காரை மோதி தாக்குதல் நடத்தப்பட்டதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்

ஜெருசலேம்,

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் சமீப மாதங்களாக இருதரப்பு இடையே வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் இருக்கும் பாலஸ்தீன அகதிகள் முகாம்களுக்குள் நுழைந்து இஸ்ரேல் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்துவதும், இதில் அப்பாவி பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.

அதேபோல் பாலஸ்தீனத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் இஸ்ரேல் நகரங்களில் தாக்குதல் நடத்துவதும் அவ்வப்போது நடக்கிறது.

இந்த நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ஜெருசலேம் நகரில் உள்ள ஒரு சந்தையில் நேற்று முன்தினம் மாலை மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது அங்கு அதிவேகத்தில் காரை ஓட்டி வந்த பாலஸ்தீன பயங்கரவாதி ஒருவர் சந்தை அருகே சாலையில் கூட்டமாக நின்று கொண்டிருந்த மக்கள் மீது காரை மோதினர்.

இதில் பலர் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் நின்றுகொண்டிருந்த மக்கள் அனைவரும் அலறிதுடித்தபடி அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.

இதனிடையே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இஸ்ரேல் போலீசார் காரை மோதி தாக்குதல் நடத்திய நபரை சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதனை தொடர்ந்து, கார் மோதியதில் பலத்த காயம் அடைந்த 5 பேரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்ந்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story