தென்கொரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி

தென்கொரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் உடல் கருகி பலியாகினர்.
தென்கொரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி
Published on

சியோல்,

தென்கொரியாவின் தலைநகர் சியோலில் இருந்து 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது டேஜியோன் நகரம். இங்கு பிரபலமான வணிக வளாகம் ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த வணிக வளாகத்தின் அடித்தளத்தில் கார்கள் நிறுத்தும் இடத்தில் திடீரென தீப்பிடித்தது.

மளமளவென பற்றி எரிந்த தீ வேகமாக அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவ தொடங்கியது. இதனிடையே தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக இறங்கினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகத்துக்கு அருகில் உள்ள கட்டிடங்களில் இருந்து 100-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.அதை தொடர்ந்து பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த கோர விபத்தில் வணிக வளாகத்தின் அடித்தளத்தில் கார் நிறுத்தும் இடத்தில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 7 பேர் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதே சமயம் தீ விபத்து நேரிட்ட சமயத்தில் வணிக வளாகத்தில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com