சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருந்து வந்து பூமியில் மோதிய விண்கல்... ஆழ்கடல் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்


சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருந்து வந்து பூமியில் மோதிய விண்கல்... ஆழ்கடல் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்
x

சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருந்து வந்த விண்கல் ஒன்று பப்புவா நியூ கினியா கடலோர பகுதியில் கடலுக்குள் விழுந்திருக்கும் என விஞ்ஞானிகளால் நம்பப்படுகிறது.நியூயார்க்,நமது சூரிய குடும்பத்தில் பூமி உள்ளிட்ட கிரகங்கள் வட்டபாதையில் குறிப்பிட்ட காலஅளவில் சூரியனை சுற்றி வருகின்றன. இந்த நிலையில், சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருந்து வந்த விண்கல் ஒன்று சூரியனின் ஈர்ப்பு விசைக்குள் சிக்காமல் பூமியை வந்தடைந்து உள்ளது என கூறப்படுகிறது. அது, பப்புவா நியூ கினியா கடலோர பகுதியில் கடலுக்குள் விழுந்திருக்கும் என நம்பப்படுகிறது.

இதுபற்றி விஞ்ஞானிகள் ஆழ்கடல் ஆராய்ச்சியில் இறங்கி, விண்கல்லை பற்றி ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட விண்கற்களில் இது 3வது விண்கல் ஆகும். ஆவ்முவாமுவா மற்றும் போரிசோவ் ஆகிய இரு விண்கற்கள் கடந்த 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் பூமிக்கு வந்து சேர்ந்தன.

இவற்றில் ஆவ்முவாமுவா விண்கல், 100 மீட்டர்கள் நீளம் கொண்டது. போரிசோவ் 0.4 முதல் 1 கிலோ மீட்டர் கொண்டது என சயின்ஸ் டைம்ஸ் தெரிவிக்கிறது.

இந்த இரு பொருட்களே விண்ணில் இருந்து பூமிக்கு வந்த பொருட்களாக கண்டறியப்பட்டு இருந்து வந்தன. எனினும், தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் இவற்றுக்கு முன்பே மற்றொரு விண்கல் விழுந்துள்ளது என பின்னர் ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி ஹார்வர்டு பல்கலை கழகத்தின் பேராசிரியர் அவி லோயப் மற்றும் மாணவர் அமீர் சிராஜ் ஆகிய இருவரும் முதன்முறையாக இந்த விண்கல்லை கண்டறிந்து, அதற்கு சி.என்.இ.ஓ.எஸ். 2014-01-08 என பெயரிட்டு உள்ளனர்.

அரை மீட்டர் அகலம் கொண்ட அந்த விண்கல்லை ஆராய்ந்த பின்னரே அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். எனினும், போதிய தகவல் இல்லாத நிலையில் இதனை முறைப்படி விண்கல்லாக ஏற்க அறிவியல் சமூகம் முதலில் மறுத்தது.

ஆனால், தலைமை விஞ்ஞானி ஜோயல் மோசர் இந்த விண்கல்லை பற்றி ஆராய்ந்து அதனை உறுதி செய்துள்ளார். புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தபோதே, அந்த விண்கல்லின் பெருமளவு பகுதி எரிந்து விட்டது தெரிய வந்துள்ளது.

இதனால், ஒரு மைக்ரோவேவ் அடுப்பை விட சற்று பெரிய அளவிலேயே அது உள்ளது. அவற்றின் மீதமுள்ள சிதறிய பகுதிகளும் பசிபிக் பெருங்கடலின் ஆழத்திற்குள் மூழ்கி உள்ளன என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, அந்த விண்கல்லை கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.


Next Story