ஏமன் கடலோர பகுதியில் அதிரடி...!! இஸ்ரேலுடன் தொடர்புடைய 2-வது கப்பல் கடத்தல்


ஏமன் கடலோர பகுதியில் அதிரடி...!! இஸ்ரேலுடன் தொடர்புடைய 2-வது கப்பல் கடத்தல்
x

கப்பலில் முழுவதும், சரக்கு பொருளாக பாஸ்பாரிக் அமிலம் கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

டெல் அவிவ்,

ஏமன் கடலோரத்தில் அமைந்த ஏடன் வளைகுடா பகுதியில் இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், 22 சிப்பந்திகள் இருந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த கப்பல் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி ஜோடியாக் என்ற கப்பல் நிறுவனம் தெரிவித்த செய்தியில், துருக்கி நாட்டு கேப்டன் தலைமையில் பயணித்த அந்த கப்பலில், ரஷியா, வியட்நாம், பல்கேரியா, இந்தியா, ஜார்ஜியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் ஊழியர்களாக உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

கப்பலில், சரக்கு பொருளாக பாஸ்பாரிக் அமிலம் கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்க கடற்படையினர் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். மற்ற கப்பல்களை அந்த பகுதியில் இருந்து விலகி செல்லும்படி கேட்டு கொண்டுள்ளனர்.

இந்த கடத்தலுக்கு பின்புலத்தில் உள்ளவர்கள் பற்றிய விவரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை. சமீபத்தில், இஸ்ரேல் நாட்டுக்குரிய கேலக்சி லீடர் என்ற பெயர் கொண்ட கப்பல் ஒன்றை, ஏமன் அருகே தெற்கு செங்கடல் பகுதியில் வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்றனர். கப்பலில் 22 சிப்பந்திகளுடன் மொத்தம் 52 பேர் இருந்தனர்.

அந்த கப்பல் துருக்கியில் இருந்து புறப்பட்டு இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. அதில், சர்வதேச அளவிலான சிப்பந்திகள் இருந்தனர். எனினும், இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட செய்தியில், அது இஸ்ரேல் கப்பல் அல்ல. கப்பலில் இஸ்ரேல் மக்கள் யாரும் இல்லை என தெரிவித்தது.

அந்த கப்பலுக்கு வெவ்வேறு நிறுவனங்கள் பங்குகளை கொண்டுள்ளதுடன், சில நிறுவனங்கள் குத்தகைக்கும் எடுத்துள்ளன. அவற்றில் இஸ்ரேல் நிறுவனமும் ஒன்று என மற்றொரு தகவல் தெரிவித்தது.

காசாவுக்கு எதிரான போரை முன்னிட்டு ஏமன் நாட்டிலுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறும்போது, இஸ்ரேலின் கப்பல்கள் அல்லது அவர்களுடைய கொடி பறக்க கூடிய கப்பல் செங்கடலில் சென்றால், அவை எல்லாவற்றையும் நாங்கள் இலக்காக கொள்வோம் என சபதமெடுத்தனர். இந்நிலையில், ஏமன் கடலோர பகுதியில் இஸ்ரேலுடன் தொடர்புடைய 2-வது கப்பல் கடத்தப்பட்டு உள்ளது.


Next Story