நடுவானில் விமானத்தில் அடிதடி சண்டையிட்ட விமானிகள் - அதிர்ச்சி சம்பவம்


நடுவானில் விமானத்தில் அடிதடி சண்டையிட்ட விமானிகள் - அதிர்ச்சி சம்பவம்
x

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது விமானி அறையில் இருந்து சத்தம் கேட்டுள்ளது.

பெர்ன்,

நடுவானில் விமானத்தில் அடிதடி சண்டையில் ஈடுபட்ட விமானிகளை விமான நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் இருந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு கடந்த ஜூலை மாதம் ஏர் பிரான்ஸ் விமானம் புறப்பட்டது.

விமானத்தை 2 விமானிகள் இயக்கினர். விமானம் ஜெனிவால் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, விமான கேப்டனுக்கும், சக விமானிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு விமானிகளும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்த நிலையில் விமானி அறையில் இருந்து அடிதடி சண்டை சத்தம் கேட்பதை விமான பணியாளர்கள் அறிந்தனர். உடனடியாக, விமானி அறையை திறந்து ஊழியர்கள் உள்ளே சென்றபோது அங்கு விமான கேப்டனும், சக விமானியும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு அடிதடியில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, இருவரையும் சமாதான படுத்திய விமான ஊழியர்கள் விமானத்தை பிரச்சினை இன்றி இயக்க வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து விமான கேப்டனும், சக விமானியும் விமானத்தை பிரச்சினையின்றி இயக்க ஒப்புக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை வராமல் இருக்க விமான பணியாளர் ஒருவர் விமானி அறையிலேயே இருந்தார். பின்னர், பெரும் பரபரப்பிற்கு பிறகு விமானம் பத்திரமாக பாரிசில் தரையிறங்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏர்பிரான்ஸ் விமான நிறுவனம் விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் விமானிகள் சண்டையிட்டது உறுதியானதையடுத்து 2 விமானிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நடுவானில் விமானத்தில் விமானிகள் அடிதடி சண்டையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story